×

ஆண்டிபட்டி அருகே சாலையில் உலா வரும் கரடிக் குட்டிகள்: பொதுமக்கள் அச்சம்: வைரலாகும் வீடியோ

 

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, கிராமச் சாலையில் கரடிக் குட்டிகள் உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. எனவே, கரடி குட்டிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு செல்லும் சாலையில் அணைக்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியையொட்டி பிரசித்தி பெற்ற கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் பொதுமக்கள் சென்று வருவர். சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு அணைக்கரைப்பட்டியில் இருந்து கருப்பசாமி கோயிலுக்கு செல்லும் சாலையில் இரண்டு கரடி குட்டிகள் உலா வந்துள்ளன. அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் கரடி குட்டிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தைக் கண்டதும், மிரட்சியடைந்த கரடி குட்டிகள் ஓடிச்சென்று, அருகில் இருந்த தோட்டத்திற்குள் மறைந்து கொண்டன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிராமச் சாலையில் கரடிகள், அவைகளின் குட்டிகள் அடிக்கடி உலா வருவதால், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் கரடி மற்றும் குட்டிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andipatti ,
× RELATED காரமடை அருகே சிறுத்தை தாக்கியதில்...