×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலையப்ப சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம்: முத்துகவசம் அணிவிப்பு

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தின் 2ம் நாளான இன்று மலையப்ப சுவாமிக்கு முத்து கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டு முழுவதும் 450க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடத்தப்படுகிறது. இதற்காக பழங்காலத்து ஐம்பொன் உற்சவர் சிலைகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமிக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் உற்சவர் சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க சிலை மீது தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. ஜேஷ்டாபிஷேகத்தின்போது இந்த தங்க கவசம் அகற்றப்பட்டு உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி பூஜை நடத்தி மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி இந்தாண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்கர தீப அலங்கார சேவை நடைபெற்றது. தொடர்ந்து 4மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

2வது நாளான இன்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்து கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் மற்றும் வீதியுலா நடைபெற உள்ளது. 3வது நாளான நாளை மாலை மீண்டும் உற்சவ மூர்த்திகளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட உள்ளது. இந்த தங்க கவசம் அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை அணிவிக்கப்பட்டிருக்கும்.

24 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகரம் பண்டிகை, வார இறுதி நாட்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று 81,340 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 44,874 பக்தர்கள் தலைமுடி காணிக்ைக செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.76 கோடி காணிக்கை செலுத்தினர். 4.42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.31 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பிய நிலையில், 4 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Malaiappa Swami ,Thirupathi Eumalayan Temple ,Thirumalai ,Jeshtabhishek ,Tirupathi Elumalayan Temple ,Sridevi ,Pudevi Sametha Malayappa ,Swami ,
× RELATED சீஷெல்ஸ் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!