தொழிலதிபரை கொன்ற இளம்பெண் விவகாரம்; பிள்ளைகளின் தப்புக்கு பெற்றோர் மீது பழிபோடாதீங்க: பாஜக நடிகை கங்கனா ஆவேச கருத்து

 

மும்பை: லோனாவாலா அருகே தொழிலதிபர் கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தைகளின் செயல்களுக்கு குடும்பத்தினர் பொறுப்பல்ல என கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து விழுந்து 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் இது விபத்து என்று கருதப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவரது வருங்கால மனைவி சியா கோயல், தனது காதலர் சேத்தன் சவுத்ரியுடன் இணைந்து கேதனை கோட்டையில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தது அம்பலமானது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி சியாவின் தந்தை கூறுகையில், ‘எனது மகள் கேதனை கொன்றது உண்மையானால், அதே கோட்டையிலிருந்து அவளையும் கீழே தள்ளிவிடுங்கள்’ என்று உருக்கமாகத் தெரிவித்தார். தற்போது சியா மற்றும் அவரது காதலர் இருவரும் போலீசாரின் காவலில் உள்ளனர். கைதான சியா கோயலுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதும், திருமணத்தைத் தவிர்க்கவே அவர் இந்தக் கொலையைச் செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கூறுகையில், ‘இக்காலத்தில் ஒருவரின் குடும்பத்தையோ, வீட்டையோ அல்லது பெற்றோரையும் பார்த்து மட்டும் பிள்ளைகளின் ஒழுக்கத்தை தீர்மானிக்க முடியாது. அவர்களைச் சுற்றி இருக்கும் நபர்கள், செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதே முக்கியம்.

மக்கள் தங்களைப் பற்றி ஒரு கவர்ச்சிகரமான பிம்பத்தை வெளியில் உருவாக்குகிறார்கள், ஆனால் உள்ளுக்குள் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரிவதில்லை. எனவே, குழந்தைகளின் கொடூரமான செயல்களுக்காக ஒருபோதும் அவர்களது குடும்பத்தை எடைபோட முடியாது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: