திருப்பூர் தண்ணீர் பந்தலில் தனியார் இரும்பு நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்

 

திருப்பூர், ஜூன் 25: திருப்பூர் மாநகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் கிழக்கு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தனியார் இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தினந்தோறும் பல நூறு டன் எடையுள்ள இரும்பு கம்பிகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு இறக்கப்படுகின்றன. அவ்வாறு கம்பிகளை கீழே இறக்கும்போதும், அவற்றை மொத்தமாக வளைக்கும்போதும் கடுமையான சத்தம் ஏற்படுவதாகவும், காற்றில் இரும்புத் தூசிகள் பரவுவதால் அந்த பகுதியில் கடுமையான காற்று மாசும் ஏற்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை தனியார் நிறுவன நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அடுத்தடுத்து புகார் மனுக்களை அனுப்பினர். இருப்பினும், அரசுத் துறைகள் தரப்பிலும் இதுவரை எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் சந்திப்பு பகுதியில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலாளர் உமாநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாகச் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு நிறுவனத்தின் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தண்ணீர் பந்தல் கிழக்கு பகுதி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: