×

திருவண்ணாமலையில் இருந்து கோவை சென்ற அரசு சொகுசு பஸ்சில் 75 பவுன் நகை கொள்ளை

சேலம்: திருவண்ணாமலையில் இருந்து கோவை சென்ற அரசு சொகுசு பஸ்சில் கொண்டு வந்த 75 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை இடையர்வீதியை சேர்ந்தவர் பிரபு (46). இவர் எம்ஜெஎம் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த கடையில் செய்யப்படும் தங்க நகைகளை திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி 402 கிராம் எடை கொண்ட 41 கைச்செயின்களை எடுத்துக்கொண்டு பிரபு, கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் இருந்து திருவண்ணாமலைக்கு கொண்டு சென்றார். அங்குள்ள 4க்கும் மேற்பட்ட நகைக்கடையில் செயினை காட்டினார். ஆனால் அவர்களுக்கு எந்த மாடலும் பிடிக்கவில்லை. சில நகைக்கடையில் பழைய நகைகளை திருப்பி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ஊழியர் பிரபு தான் கொண்டு சென்ற நகை மற்றும் பழைய நகைகள் என மொத்தம் 596 கிராம் தங்க நகைகளுடன் நேற்றுமுன்தினம் இரவு கோவை புறப்பட்டார். அரசு ஏசி பஸ்சில் பயணம் மேற்கொண்டார். இரவு 1.30 மணியளவில் சேலம் அயோத்தியாப்பட்டணம் மார்க்கெட் அருகில் உள்ள பேக்கரி கடையில் டிரைவர் டீ குடிப்பதற்காக பஸ்சை நிறுத்தினார்.

பிரபு, நகை பையை இருக்கையில் வைத்து விட்டு டீ குடித்துவிட்டு, மீண்டும் பஸ்சில் ஏறி பார்த்தபோது, நகை பையை காணவில்லை. பஸ் முழுவதும் தேடியும் சிக்கவில்லை. அவரின் பின் இருக்கையில் இருந்த 2 பேரை காணவில்லை. இதுகுறித்து காரிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் இருந்து காணாமல் போன 2 பேரும் யார்?, என்பது குறித்து விசாரித்தனர்.

அதில், திருவண்ணாமலையில் இருந்து பஸ் புறப்பட்ட நிலையில், செங்கத்தில் பஸ் நின்று பயணிகளை ஏற்றியுள்ளது. அப்போது 6 பேர் பஸ்சில் ஏறியுள்ளனர். அதன்பிறகு பஸ் அயோத்தியாப்பட்டணத்தில்தான் நின்றுள்ளது. அதன்பிறகு அதில் 2 பேரை காணவில்லை. அவர்கள் தான் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

* டிக்கெட் சில்லரை ரூ.70ஐ வாங்காத கொள்ளையர்கள்
செங்கத்தில் 6 பேர், பஸ்சில் ஏறிய நிலையில் 2 பேர் கோவைக்கு டிக்கெட் கேட்டு 800 ரூபாய் கொடுத்துள்ளனர். ஒருவருக்கு 365 ரூபாய் என்பதால் 2 பேருக்கு மொத்தம் 730 ரூபாய் வருகிறது. மீதம் 70 ரூபாய் சில்லரை இல்லை என தெரிவித்த கண்டக்டர் பழனி, இறங்கும்போது தருவதாக கூறியதுடன், டிக்கெட்டின் பின்பகுதியில் எழுதி கொடுத்துள்ளார். அந்த 2 பேர் தான் மாயமாகி உள்ளனர்.

Tags : Tiruvannamalai ,Coimbatore ,Salem ,Prabhu ,Idayarveeti, Coimbatore ,MJM Jewelers… ,
× RELATED தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு எய்ட்ஸ்...