×

சேலத்தில் போதை ஊசி செலுத்தி இளம்பெண் கூட்டு பலாத்காரம்?

சேலம்: சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் நெஞ்சுவலியால் நேற்று முன்தினம் மாலை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போதை மாத்திரைக்கு அடிமையானதாக தெரிவித்தார். ஆண் நண்பர்களுடன் சேர்ந்து போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக ஏற்றி கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு கடந்த 3 மாதமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், அப்பெண்ணின் கூட்டாளிகளான பூபதி (23), அஜித் (19) ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்துதான் அந்த இளம்பெண்ணும் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இவர்கள் ஒன்றாக அமர்ந்து போதை ஊசியை ஏற்றிக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான நேரங்களில் அப்பெண் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளானாரா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இன்னொரு கூட்டாளியான விஜி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரையும் தேடிவருகின்றனர்.

* பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை 4.50 மணிக்கு வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்டு பகுதியில் மறைந்திருந்த 19வயதான வாலிபர், சைக்கிளில் சென்ற அந்த மாணவியை மறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுள்ளார்.

அப்போது வயல்வெளியில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகள் ஓடி வந்து அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர், அந்த வாலிபரை மீமிசல் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கோபாலபட்டினம் அவுலியா நகர் பகுதியை சேர்ந்த பைசல்கான் (19) என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பைசல்கானை கைது செய்தனர்.

Tags : Salem ,Salem's Dadakapatti ,Salem Government Hospital ,
× RELATED சென்னையில் நண்பர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் தீவிர விசாரணை