மியாமி: 48அணிகள் பங்கேற்றுள்ள 23வது பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் தலா 4 அணிகள் என 12 குழுவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டம் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் மியாமி ஸ்டேடியத்தில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில்-ஸ்காட்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர் 7வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். பின்னர் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+3’) மற்றொரு சிறப்பான ஹெட்டர் (தலையால் முட்டி) கோல் அடித்து அசத்தினார். 2வது பாதியில் ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மதேயுஸ் குன்ஹா பிரேசில் அணிக்கான 3வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
காயத்தில் இருந்து மீண்ட பிரேசில் முன்னணி வீரர் நெய்மர், ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பிரேசில் 3 போட்டியில் 2ல் வெற்றி, ஒரு டை என 7 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்து ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு தகுதிபெற்றது. 3 புள்ளிகளுடன் இருக்கும் ஸ்காட்லாந்து அணி, சிறந்த மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகளின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதா என்று காத்திருக்க வேண்டிய சூழலில் உள்ளது.
மொராக்கோ அதிரடி:
இதே பிரிவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் மொராக்கோ-ஹைதி அணிகள் மோதின. 10வது நிமிடத்தில் ஹைதி வீரர் லென்னி ஜோசப் உதைத்த பந்து, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பவ்னவ் மீது பட்டு எதிர்பாராதவிதமாக ஓன் கோலாக மாறியதால் ஹைதி 1-0 என முன்னிலை பெற்றது. 39வது நிமிடத்தில் மொராக்கோ கேப்டன் அஷ்ரஃப் ஹக்கிமி கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே (43வது நிமிடம்) ஹைதியின் வில்சன் இசிடோர் கோல் அடித்து 2-1 என முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+1’ நிமிடம்) மொராக்கோவின் இஸ்மாயில் சாய்பாரி கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. 2வது பாதியில் மொராக்கோ பயிற்சியாளர் கொண்டு வந்த மாற்று வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 78வது நிமிடத்தில் சவுபியான் ரகீமி மற்றும் 89வது நிமிடத்தில் கெஸ்சிம் யாசின் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து மொராக்கோவின் 4-2 என்ற மாபெரும் வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியின் மூலம் மொராக்கோ 7 புள்ளிகளுடன் குரூப் ‘சி’-ல் 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. 3 தோல்விகளை சந்தித்த ஹைதி தொடரில் இருந்து வெளியேறியது.
