×

தடுத்த தோழிகள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்தார் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண் சரமாரி குத்தி கொலை: தப்பிய வாலிபருக்கு வலை; பல்லாவரம் அருகே பரபரப்பு

சென்னை: பல்லாவரம் அருகே அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து, இளம்பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்த ரேஷ்மா (29) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அசோக் (29) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஜஸ்வந்த் (9), யாத்திகா (8) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்த ரேஷ்மா, கடந்த 2 மாதங்களாக தனது மகள் யாத்திகாவுடன் அனகாபுத்தூர், சத்யா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ரேஷ்மாவின் அத்தை மகனான விஜி என்பவர், அடிக்கடி இவரது வீட்டிற்கு வந்து, தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும், என கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு ரேஷ்மா மறுத்ததால், அவரிடம் விஜி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் ரேஷ்மா வீட்டிற்கு வந்த விஜி, `நீ என்னுடன் வாழவில்லை என்றால் வேறு யாருடனும் வாழ முடியாது’ என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த ரேஷ்மா, அருகில் வசிக்கும் தனது தோழி மரியா மற்றும் அவரது சகோதரி ஜெனிபர் ஆகியோரை துணைக்கு அழைத்து, தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் ரேஷ்மா வீட்டிற்கு வந்த விஜி, கதவை திறக்குமாறு பலமாக தட்டியதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டின் உள்ளே இருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து, கதவை திறக்க மறுத்துள்ளனர். இதனால், மேலும் ஆத்திரமடைந்த விஜி, வீட்டின் ஜன்னல் வழியாக கையை உள்ளே நுழைத்து, கதவைத் திறந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அப்போது, ரேஷ்மாவின் தோழிகள், விஜியை வெளியே செல்லுமாறும், இல்லையென்றால் போலீசை அழைப்போம் எனவும் எச்சரித்துள்ளனர். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை, அங்கிருந்த பெண்களின் முகத்தின் மீது விஜி அடித்துள்ளார். இதில், நிலை குலைந்த பெண்கள், தூக்க கலக்கத்தில் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் விஜி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ரேஷ்மாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேஷ்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலை வேளையில் பெண்களின் அலறல் சத்தம் கேட்டதால், திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, தப்பிச்சென்ற விஜியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ballavaram ,Chennai ,Reshma ,Bengaluru ,Ashok ,
× RELATED சென்னையில் நண்பர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை: போலீசார் தீவிர விசாரணை