×

இந்தியாவில் முதியோர் நிலைமை மோசம்; ‘புளு’ காய்ச்சலால் ஆண்டுக்கு 1.2 லட்சம் பேர் பலி: மருத்துவ அகாடமி இதழில் தகவல்

 

புதுடெல்லி: இந்தியாவில் ஃபுளு காய்ச்சல் பாதிப்பால் ஆண்டுதோறும் சராசரியாக 1.2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் முதியவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் விகிதம் மிகவும் பின்தங்கிய நிலையில், அதாவது 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக இந்திய முதியோர் மருத்துவ அகாடமி இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, ஃபுளு காய்ச்சலுக்கான தடுப்பூசியை 1.59 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர். இதேபோல் டெட்டனஸ் தடுப்பூசியை 2.75 சதவீதம் பேரும், ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை 1.82 சதவீதம் பேரும், நிமோனியா பாதிப்புக்கான நிமோகோக்கல் தடுப்பூசியை வெறும் 0.74 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் ஃபுளு காய்ச்சல் பாதிப்பால் ஆண்டுதோறும் சராசரியாக 1.2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மேலும் ஃபுளு காய்ச்சலால் உயிரிழப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவத்துறை நிபுணர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறுகையில், ‘இந்தியாவில் பெரியவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முறை மிகவும் குறைவாகவே உள்ளது. தடுப்பூசி என்பது ஆரோக்கியத்திற்கான முதலீடு போன்றது; இது தொற்று மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தவிர்த்து, வயது முதிர்ந்த காலத்திலும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்’ என்றார். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை 2022ம் ஆண்டில் 10.5 சதவீதமாக இருந்த நிலையில், இது 2050ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிறுவனங்களின் நிபுணர்கள் அடங்கிய குழு, முதியவர்களுக்கான முறையான தடுப்பூசி வழிகாட்டுதல்கள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தடுப்பூசி மீதான தயக்கம் காரணமாகவே இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

Tags : India ,Journal of the Medical Academy ,New Delhi ,
× RELATED மேற்கு வங்க மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கம்