×

சிவசேனா, திரிணாமுல் கட்சியில் நடந்தது போன்று ஒடிசாவில் நவீன் பட்நாயக் கட்சியில் மெகா பிளவு? பாஜகவின் திட்டம் அம்பலம்

 

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆளும் பாஜகவுடன் இணைய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்) மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டதைப் போன்ற பிளவு, தற்போது ஒடிசாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, லோக்சபா தேர்தலில் பிஜூ ஜனதா தளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அக்கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சாமல் கூறுகையில், ’எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல முக்கியப் புள்ளிகள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர்; கள நிலவரத்தை ஆய்வு செய்த பின்னரே அவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார். இதேபோல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் புரோஹித் கூறுகையில், ‘இன்னும் 2 மாதங்களில் பிஜூ ஜனதா தளம் இரண்டாக உடையும். முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தனது கட்சியின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். அக்கட்சி நிர்வாகிகள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைக் கருதி பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.

பாஜகவின் இந்த புகார்களை பிஜேடி செய்தித் தொடர்பாளர் லெனின் மொகந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பவே பாஜக பொய் பிரசாரம் செய்கிறது. நவீன் பட்நாயக் தலைமையில் கட்சி வலிமையாக உள்ளது’ என்றார். பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏ அருண் குமார் சாஹு கூறுகையில், ‘பாஜக அரசில் 6 அமைச்சர் பதவிகள் இன்னும் காலியாக உள்ளன. அமைச்சரவையை விரிவாக்கம் செய்தால் பாஜகவில் உட்கட்சி மோதல் வெடிக்கும் என்பதால் முதல்வர் பயப்படுகிறார்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

Tags : Naveen Patnaik party ,Odisha ,Sivasena ,Trinamul party ,BJP ,Bhubaneswar ,Odisha Assembly ,Biju ,
× RELATED ஊராட்சி தலைவர்களின் வங்கிக்...