×

திருவனந்தபுரம் மாநகராட்சியில் 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் ரத்து: தெய்வங்களின் பெயரால் பதவி ஏற்றதால் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பல்வேறு தெய்வங்களின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணத்தை கேரள உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரள வரலாற்றில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் பாஜ 50 வார்டுகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 51 கவுன்சிலர்கள் தேவை என்பதால் ஒரு சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவுடன் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது. தொடர்ந்து மேயராக வி.வி. ராஜேஷ் பொறுப்பேற்றார்.
கேரள உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி கவுன்சிலர்கள் தெய்வத்தின் பெயரால் அல்லது உளமார என்று கூறித்தான் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் சில பாஜ கவுன்சிலர்கள் பத்மநாபசுவாமி, சபரிமலை ஐயப்பன், ஆற்றுகால் தேவி என பல்வேறு தெய்வங்களின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்தனர். இது சட்டத்திற்கு எதிரானது என்பதால் இவ்வாறு பதவியேற்ற 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப் பிரமாணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி சிபிஎம் கவுன்சிலர் தீபக் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை இன்று பரிசீலித்த நீதிபதி குஞ்சி கிருஷ்ணன், தெய்வங்களின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்த 20 பாஜ கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 4 வாரங்களுக்குள் அவர்கள் அனைவரும் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் அவர் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : BJP ,Thiruvananthapuram Corporation ,Kerala High Court ,Thiruvananthapuram ,Kerala… ,
× RELATED மேற்கு வங்க மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கம்