இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள கேயி பன்யோர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யாசாலி பகுதியில் உள்ள நீப்கோ நீர்மின் திட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகே, கட்டுமானத்தில் இருந்த தடுப்புச்சுவர் ஒன்று வெள்ளத்தின் அழுத்தத்தால் இடிந்து விழுந்தது.
இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் இருந்த சுமார் 18 வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 3 பேர் காணாமல் போயுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறைத் செயலாளர் தனி சூலு தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்குத் கூடுதல் துணை ஆணையர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இதனையடுத்து மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஏற்கனவே களத்தில் இறங்கிப் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் அவசர உதவிக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்கு உதவ முன்னாள் ராணுவ வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கநதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அங்குள்ள நீர்மின் திட்டத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
