*விருதுநகர் அருகே பரபரப்பு
விருதுநகர் : விருதுநகர் அருகே லாரி மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே மருளூத்து பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் சதாம் உசேன்(28).
இவர், அரியலூரில் இருந்து விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதிக்கு டாரஸ் லாரியில் சிமெண்ட் மூலப்பொருட்களை நேற்று ஏற்றிக்கொண்டு வந்தார். விருதுநகர் சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஈரோடு மாவட்டம் அந்தியூர், நாகலூர் பகுதியை சேர்ந்த வில்சன்(48) என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓட்டி வந்த சொகுசு கார், டாரஸ் லாரியை முந்தி சென்றது. அந்த இடத்தில் நான்கு வழிச்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக இடது ஓரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கோன்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த கோன்களை இடித்து தள்ளிய கார், சாலையின் வலது ஓரத்தில் சென்டர் மீடியன் அருகே கட்டப்பட்டிருந்த சிறிய பால தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரின் முன் பகுதி தலைகீழாக திரும்பியது. அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பலமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் பலூன் விரிவடைந்ததால், அதில் பயணம் செய்த வில்சன் உள்பட 4 பேர் சிக்கிக் கொண்டனர். விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, காரில் சிக்கியவர்களை ஒரு மணிநேரம் போராடி மீட்டனர். படுகாயமடைந்த 4 பேரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காரில் பயணித்தவர்கள் சிவகாசியில் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து விருதுநகர் ஊரக காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாசாணமுத்து என்ற தீயணைப்பு வீரரின் காலில் காயம் ஏற்பட்டது. அவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
