அரக்கோணம் பழனிப்பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட 3வது கண் சுரங்கப்பாதை டாஸ்மாக் பாராக மாறிய அவலம்

*பெண்களிடம் வழிப்பறி, சில்மிஷத்தில் ஈடுபடும் மர்ம நபர்கள்

*கேமரா பொருத்தி கண்காணிக்க கோரிக்கை

அரக்கோணம் : அரக்கோணம் பழனிப்பேட்டையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட சுரங்கபாதை டாஸ்மாக் பாராக மாறியதால் அங்கு பெண்களிடம் வழிப்பறி, சில்மிஷத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் இரட்டை கண் வாராவது உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், பொதுமக்கள் வழியாக நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அவ்வாறு நடந்து செல்லும் போது அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

இதுபோன்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து இரட்டை கண் வாராவதியையொட்டி சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது கண் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மூன்றாவது கண் சுரங்கப்பாதையில் உள்ள விளக்குகள் உடைக்கப்படுவது, நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி மற்றும் சில்மிஷங்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முறையான பராமரிப்பு இன்றி இருப்பதாலும் பொதுமக்கள் அவ்வழியாக நடந்து செல்வதற்கு மிகவும் பயப்படுகின்றனர். அதையும் மீறி சிலர் வேறு வழி இல்லாமல் நடந்து சென்று வருகின்றனர்.

அதேபோல் மழை காலங்களிலும் மூன்றாவது கண் சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனாலும், அவ்வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபற்றி பல்வேறு புகார்கள் எழுதும்போது நகராட்சி நிர்வாகம், ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது அப்பகுதியில் ஆய்வு செய்து தேங்கிய மழை நீர் எடுத்தல், விளக்குகள் சரி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்களாம்.

அதைத்தொடர்ந்து, மீண்டும் கண்டுகொள்ளாமல் பராமரிப்பு இன்றி மூன்றாவது கண் வாராவது வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில், அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.இந்த டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் முதல் மூடும் நேரம் வரை எப்போதும் மது பிரியர்களின் கூட்டம் மிகுந்து காணப்படும். இதனால், அப்பகுதியில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

ரயில் நிலையத்தையொட்டியே டாஸ்மாக் கடை இருப்பதால் பெண்கள் அவ்வழியாக நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகியும், முகம் சுளித்தும் செல்ல வேண்டிய சூழ்நிலை வருகிறது.

அதேபோல், மூன்றாவது கண் வாராவது நுழைவாயிலின் இரு பகுதியிலும் மது பிரியர்கள் பார்களில் மது அருந்துவது போன்று நினைத்து படிக்கட்டுகளில் அமர்ந்து பட்டப் பகலிலேயே மது அருந்தி வருகின்றனர். மேலும் மது காலி பாட்டில்கள்,தண்ணீர் பாட்டில்கள்,கிளாஸ் போன்ற பொருட்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர்.

இதில் ஒரு சிலர் வாந்தியையும் எடுத்து அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றனர். அதையும் மிஞ்சும் வகையில் ஒரு சிலர் அரைகுறை நிர்வாண ஆடைகளுடனும் அங்கு சுற்றித் திரிவதும், சுரங்கப் பாதையின் நடுவில் படுத்து உறங்குவதும் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இதனால், மூன்றாவது கண் சுரங்கப் பாதை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற அலங்கோல அவல நிலையால் மூன்றாவது கண் சுரங்கப்பாதை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாததால் மீண்டும் இரட்டை கண் வாராவதி வழியாகவே நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு செல்லும் போது மீண்டும் வாகனங்களில் சிக்கியும், ஆபத்தான நிலைகளில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற பொதுமக்களின் பரிதாப நிலையை கண்டு காவல் துறையும், நகராட்சி நிர்வாகமும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரக்கோணம் மூன்றாவது கண் வாராவதி பகுதியில் ஆய்வு செய்து, அவற்றை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மூன்றாவது கண் வாராவதியை பாராக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். தொடர்ந்து பகுதியில் காவல்துறையின் ரோந்து பணியையும் அதிகப்படுத்த வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடை மூட கோரிக்கை: பழனிப்ப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மது பிரியர்களின் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இருளில் மூழ்கிய சுரங்கப்பாதை

அரக்கோணம் ரயில் நிலையம் ரூ.பல கோடி மதிப்பீட்டில் பல நவீன வசதிகளுடனும், மறு கட்டமைப்புகளும் மற்றும் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகிறது. இதனால், சென்னைக்கு அடுத்தபடியாக பெரியதாக வளர்ந்து வரும் ரயில் நிலையமாக அரக்கோணம் மாறி வருகிறது.

இந்நிலையில், ரயில் நிலையத்தையொட்டி பழனிப்பேட்டை பகுதியில் இரட்டைக்கண் வாராவதி மற்றும் மூன்றாவது கண் வாராவதி முறையான பராமரிப்பு இல்லாததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் சுரங்கபாதை 24 மணிநேரமும் இருளில் மூழ்கி உள்ளது. எனவே விளக்குகளை பொருத்தி சுரங்கப்பாதைக்குள் எரிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: