குன்னூர் : குன்னூர் அருகே உள்ள ஈச்சமரம் பகுதியில் சாரையோர பழக்கடையை சேதப்படுத்தி பலாப்பழங்களை ருசித்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.குன்னூர் மலைப்பாதையில் பலாப்பழ சீசனையொட்டி அதன் வாசனைக்கு ஈர்க்கப்பட்டு காட்டு யானைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன.
மலைப்பாதையில் உலா வரும் இந்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் குன்னூர் மலைப்பாதையில் உள்ள ஈச்சமரம் பகுதிக்கு அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று திடீரென உலா வந்தது.
அங்கு சாலையோரம் இருந்த ஒரு பழக்கடையில் விற்பனைக்காக பலாப்பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பலாப்பழத்தின் வாசனையை நுகர்ந்த அந்த யானை, கடையை நோக்கி வந்தது.
யானை நெருங்கி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
தொடர்ந்து, கடையில் வைக்கப்பட்டிருந்த பலாப்பழங்களை சாப்பிட்டதோடு கடையை சேதப்படுத்தியது. இந்த காட்சியை வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.
வாகன ஓட்டிகள் அச்சம்
யானையிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை ஒன்று நேற்று முன்தினம் பகல் முழுவதும் காவிலிபாளையம் குளத்தில் முகாமிட்டது. இரவு 8 மணி அளவில் குளத்தை விட்டு மெதுவாக வெளியேறிய காட்டு யானை குப்பன்துறை, வாலிபாளையம் மற்றும் விண்ணப்பள்ளி வழியாக சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து வனப்பகுதி நோக்கி சென்றது.
விண்ணப்பள்ளி அருகே காட்டு யானை திடீரென சாலையை கடந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் திடீரென யானை சாலையை கடப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்து வாகனத்தை உடனடியாக யு டர்ன் அடித்து திருப்பி யானையிடமிருந்து தப்பினார்.
நூழிலையில் இருசக்கர வாகனஓட்டி காட்டுயானையிடமிருந்து தப்பிய காட்சியை அப்பகுதி வழியே சென்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
