×

ஆக்கிரமிப்பு காரணமாக திருவொற்றியூர் அஜாக்ஸ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் திணறல்

 

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், ராஜா சண்முகம் நகர், சார்லஸ் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாணிக்கம் நகர் சுரங்கப்பாதையை கடந்துதான் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வாகனங்களில் மக்கள் வருகின்றனர். அஜாக்ஸ் சந்திப்பில் உள்ள மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில் நிலையம் உள்ள அஜாக்ஸ் சந்திப்பில் ஏராளமானோர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக பஸ்கள் உள்பட வாகனங்கள் அனைத்தும் வளைவில் திரும்ப முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் அலுவலர்கள் ஆகியோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சரியான நேரத்திற்கு போகமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

‘’பாதசாரிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்’ என்று சென்னை மாநகராட்சி மற்றும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘’போக்குவரத்து போலீசார், திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், ‘’அஜாக்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் விபத்து, போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்தவேண்டும்’ என்றனர்.

 

Tags : Thiruvotiyur Ajax junction ,Thiruvotiyur ,Ambedkar Nagar ,Raja Sanmugham Nagar ,Charles Nagar ,Chennai ,Manikam Nagar Subway ,Thiruvotiyur Highway ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...