சென்னை: கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சுற்றி திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. தெருநாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பாக கல்வி நிலையங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொது இடங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலை செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
