நாகை: தவெக அரசைக் கண்டித்து நாகை அத்திபுலியூரில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினர். நாகை, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்யாமல், முதற்கட்டமாக ரூ.50,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்யப்போவதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், தற்போது ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுமையாகவும், அதற்கு மேல் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனத் தனது முந்தைய அறிவிப்பிற்கு முற்றிலும் முரணான புதிய பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் முரணான அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘தேர்தல் வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றக் கேட்கிறோம்’ எனக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாகை அத்திப்புலியூரில் தரையில் அமர்ந்து வாழை இலையில் மண் தின்னும் போராட்டத்திலும், அரசுக்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்ட கைகளில் திருவோடு ஏந்தும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.
