ஒன்றிய அரசின் புதிய ஜன் விசுவாச சட்டம் 2026 அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்வே சட்ட விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஜூலை 1ஆம் தேதி அன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராத இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு 500 ரூபாயாக வசூலிக்கப்படும். டிக்கெட் எடுக்காதவர் பயணிக்கும் தூரத்திற்கான ரயில் கட்டணத்தோடு அபராத தொகையாக ரூ.500 வசூலிக்கப்படும்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண்கள் பயணம் செய்தால் வசூலிக்கப்படும் அபராத தொகை ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு 2500 ரூபாயாக வசூலிக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆண் பயணியை உடனடியாக ரயிலில் இருந்து இறக்கிவிடவும் ரயில்வே ஊழியர்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
வேறொருவரின் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி பயணித்தால் அந்த டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதுடன் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் யாசகம் எடுப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே தவறை மீண்டும் செய்தால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ரயில்களில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் அல்லது ஆபத்தான பொருள்களை எடுத்து சென்றால் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபத்தரம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
