முத்தரப்பு ODIA தொடர்: இறுதிப்போட்டியில் இலங்கையை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா!

டம்புள்ளா: திலக் வர்மா தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி, இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை ‘ஏ’ அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை ‘ஏ’ அணி, இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியின் சிறப்பம்சமாக, இந்திய அணியின் 15 வயதே ஆன இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து, ‘லிஸ்ட் ஏ’ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த உலக சாதனை படைத்தார். அவர் மொத்தம் 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

இவரைத் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் திலக் வர்மா 67 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும் எடுத்தனர். மேலும் பிரியான்ஷ் ஆர்யா (39), அனுகுல் ராய் (39) மற்றும் குமார் குஷாக்ரா (36) ஆகியோரின் முக்கிய பங்களிப்பால் இந்தியா 377 ரன்களை எட்டியது. இலங்கை தரப்பில் குதாஸ் மதுலன், ரவிந்து பெர்னாண்டோ மற்றும் வனுஜ சஹான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பிரமாண்ட இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அவிஷ்கா பெர்னாண்டோ (3), நிரோஷன் டிக்வெல்லா (25) மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ (21) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி இலங்கையை 75 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழக்கச் செய்து முடக்கினார். அதன் பின்னர், சதீர சமரவிக்ரம (52) மற்றும் கேப்டன் சஹான் ஆராச்சிகே (38) ஜோடி அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுக்க முயன்றது. ஆனால் அசோக் சர்மா இந்த ஜோடியைப் பிரித்து சமரவிக்ரமவை ஆட்டமிழக்கச் செய்தார்.

இறுதிக்கட்டத்தில் வனுஜ சஹான் (62) மற்றும் விஜயகாந்த் வியாசகாந்த் (39) ஜோடி 77 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலாக விளங்கியது. இவர்களின் கூட்டணியை அனுகுல் ராய் உடைத்தார். இறுதியில் விப்ராஜ் நிகம் மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களை சுருட்டினர். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் அசத்திய யாஷ் தாக்கூர் மற்றும் விப்ராஜ் நிகம் தலா 3 விக்கெட்டுகளையும், அனுகுல் ராய் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கும், கோப்பையை வெல்வதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தனர்.

Related Stories: