சென்னை: லஞ்ச விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் விமலா குறித்து அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்துறை அதிகாரி ஒருவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் விமலாவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய விமலா, வருவாய்துறை அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் வருவாய்துறை அதிகாரி புகார் செய்தார். இந்தப் புகார் குறித்து ஐஜி துரைக்குமார், எஸ்பி தேவராணி ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பணம் கேட்டு மிரட்டியது நிரூபணமானது அதைத் தொடர்ந்து விமலாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து ஏடிஜிபி அருண் உத்தரவிட்டார்.
இந்தநிலையில், விமலா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த 4ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி சோதனை நடந்தது. இந்த சோதனையில் 46 பத்திரப்பதிவு அலுவலகங்களில் இருந்து ரூ.37.75 லட்சம் பணம் சிக்கியது. குறிப்பாக சென்னை அடையார் எல்பி.சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது மதியம் 2.30 மணி முதல் இரவு வரை நடந்த சோதனையில் அடையார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் எந்த பணமும் சிக்கவில்லை. அதேநேரம் இன்ஸ்பெக்டர் விமலா ஏன் பணம் சிக்கவில்லை. நன்றாக சோதனை நடத்தினீர்களா என்று தன்னுடன் சோதனை நடத்த வந்த போலீசாரிடம் கடிந்து கொண்டார். அப்போது சோதனை நடத்திய போலீசார் ‘மேடம் எல்லா இடங்களிலும் சோதனை நடத்திவிட்டோம் பணம் சிக்கவில்லை மேடம்’ என்று கூறியுள்ளார்.
அப்போது இன்ஸ்பெக்டர் விமலா நான் திரும்ப சோதனை செய்கிறேன் என்று, அலுவலகத்தில் 3 இடங்களில் இருந்து ரூ.56,130 பணம் எடுக்கிறார். இதை சோதனை நடத்த வந்த போலீசாரே அதிர்ச்சியடைய செய்தது. எப்படி மேடம் பணம் அங்கு தான் இருக்கிறது என்று தெரிந்ததுபோல் பணத்தை கைப்பற்றியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அதுதான் எனது சர்வீஸ் என்று சிரித்தப்படி கூறியுள்ளார். இதற்கிடையே சோதனையின் போது பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் எப்படி பணம் அங்கு மறைத்து வைக்கப்பட்டது என்று சந்தேகப்பட்டனர். இதனால் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஏற்கனவே அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் சோதனை நடப்பதற்கு முன்பு அலுவலகத்திற்கு வந்து 3 இடங்களில் ரூ.56 ஆயிரம் பணத்தை பிரித்து மறைத்து வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வீடியோ காட்சிகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், முன்னாள் ஊழியரை பத்திரப்பதிவு அதிகாரிகள் அழைத்து விசாரித்த போது, அலுவலகத்தில் பதவி போட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலா யோசனை உடன் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்ஐ ஒருவர் முன்னாள் ஊழியரிடம் கொடுத்து குறிப்பிட்ட 3 இடங்களில் வைக்க கூறியது தெரியவந்தது. அந்த பணத்தை இன்ஸ்பெக்டர் விமலா கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணிடம் நேரடியாக இன்ஸ்பெக்டர் விமலா மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி துரைக்குமார், எஸ்பி தேவராணி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அதே லஞ்ச புகாரின் அடிப்படையில், டிஎஸ்பி ஜாய் தயாள் அதிரடியாக ஊட்டிக்கு பணியிட மாற்றம் செய்து அருண் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையில் களையெடுப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
