ஊட்டி : ஊட்டி அருகே வேலிவியூ பகுதியில் மலைரயில் தண்டவாளம் மற்றும் குகைக்குள் செல்ல கூடாது என்ற எச்சரிக்கையை மீறி அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் விபத்து அபாயம் நீடிக்கிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஊட்டி மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் குகைகள், பாலங்கள் உள்ளன. இந்த சூழலில் ஊட்டி – குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் வேலிவியூ பகுதியில் கேத்தி செல்லும் சாலையை ஒட்டி மலை ரயில் செல்லும் குகை உள்ளது.
சிலர் இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றனர். கடந்த மாதம் கோடை சீசனின் போது சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த நிலையில், வெளியூர் சுற்றுலா பயணிகள் சிலர் அந்த மலை ரயில் குகைக்கு சென்றுள்ளனர். குகை இருட்டாக இருந்த நிலையில் அதனுள் சென்று பார்வையிட்டு வீடிேயா எடுத்துள்ளனர்.
அப்போது திடீரென மலை ரயில் வந்த நிலையில் குகைக்குள் ஒதுங்க வழியில்லாததால் உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பியுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பான செய்தி நமது நாளிதழில் வெளியானது.
இதனை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்டவாள பகுதியில் அத்துமீறி நுழைய கூடாது. மீறி நுழைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த எச்சரிக்கையும் மீறி இப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் நுழைவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
