ஜீவாவின் ஃபிட்னெஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் ஜீவா, தனது இயல்பான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தவர் இவர். பல ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து பயணித்தாலும், இவரது உடல் ஆரோக்கியமும் உடற்தகுதியும் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்து வருகிறது. ஜீவாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களைத் தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: நான் நடிக்கத் தொடங்கிய பிறகே ஃபிட்னெஸின் அவசியத்தை உணர்ந்தேன். அதிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஜிம்மில் ஈடுபடுகிறேன். அதில், எடைப் பயிற்சிகள், கார்டியோ பயிற்சிகள் மற்றும் தசை வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறேன்.எப்படி நாம் தினசரி அன்றாட வேலைகளை கட்டாயமாக வைத்திருக்கிறோமோ அது போலவே, உடற்பயிற்சியும் நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய வழக்கமாகும். ஏனென்றால், உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சிகள் செய்யும்போது, ​​​​நாம் நன்றாகவும் ஃபிட்டாகவும் இருக்க முடியும்.

ஆனால், சிலர் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு தருவதில்லை. எண்பது சதவீத ஃபிட்னெஸ் சமையலறையில் தயாரிக்கப்படும் உணவிலும், மீதம் உள்ள 20 சதவீதம் மட்டுமே உடற்பயிற்சி செய்தால் போதுமென்று நினைக்கிறார்கள். இதனால், ஒருமணிநேரம் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்துவிட்டு, அவர்கள் விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். அதனால், மறுநாள் ஜிம்மிற்குச் செல்லும்போது, ​​அதே எடையில் அவர்கள் தொய்வடைகிறார்கள். இது சரியான முறையல்ல, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு உணவு கட்டுப்பாடும் முக்கியமாகும்.

டயட்: உணவு ஒரு நபரின் உடற்தகுதி அளவை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே சரியான உணவுப் பழக்கமும் ஃபிட்னெஸின் முக்கிய அம்சமாகும். அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றை எனது உணவில் நிச்சயம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். எண்ணெய் மற்றும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அளவோடு மட்டுமே எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

திரைப்படங்களுக்காக உடல் தோற்றத்தை மாற்றவேண்டிய சூழல் வந்தாலும், இயற்கையான முறையிலேயே எனது உடல் தோற்றத்தை வடிவமைத்துக் கொள்கிறேன். அதற்காக முறையான உணவு பழக்கமும் கடின உழைப்பையும் கடைபிடித்து வருகிறேன். இதுவே நீண்டகால ஆரோக்கியத்திற்கான வழியாக நான் நினைக்கிறேன்.

அதுபோன்று மன ஆரோக்கியத்திற்கும் நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். ஏனென்றால் மன ஆரோக்கியமும் ஃபிட்னெஸில் ஒரு அங்கமாகும். மனம் சாந்தமாக இருந்தால்தான் உடலும் நலமாக இருக்கும். அதற்காக குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், நண்பர்களுடன் பழகுதல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை எனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக உள்ளன.

பொதுவாக ஃபிட்னெஸ் என்று எடுத்துக் கொள்ளும்போது, குறைந்தபட்சம் தினசரி ஆறிலிருந்து ஏழு மணி நேரமாவது இரவு தூக்கம் முக்கியம். அதுபோன்று, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் அருந்துவது அவசியமாகும். இது தவிர, காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதையும் வழக்கமாக கொள்ளவேண்டும். மேலும், குறைந்தபட்சம் சின்ன சின்ன உடற்பயிற்சியோ, நடைபயிற்சியோ செய்வதை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள
முடியும்.

தொகுப்பு:- தவநிதி

Related Stories: