குழந்தைகள் எலும்பு முறிவு – முதலுதவி என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

பள்ளி விடுமுறை காலம் தொடங்கிவிட்டாலே குழந்தைகள், ‘வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி…” என ஆடி மகிழ்வார்கள். அதே நேரத்தில் விபத்துகளுக்கான அபாயம் அதிகரிக்கும் காலமும் இதுவே. ஏனென்றால், தெருவில் இறங்கி விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல் என்று குழந்தைகள் துறுதுறுவென்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள்.

இதனால், குழந்தைகள் கீழே விழுந்து அடிபடவும், கை, கால் எலும்பு முறிவு ஏற்படும் சம்பவங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இப்படி குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் நாம் உடனடியாக என்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என எலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் விக்னேஸ்வரன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

குழந்தைகளின் எலும்புகள் மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருப்பதால், பெரியவர்களை விட மிக எளிதாக குழந்தைகளுக்கு எலும்பு முறிவுகள் (Fractures) அல்லது விரிசல்கள் ஏற்படலாம். மணிக்கட்டு, முன்கை மற்றும் காலில் இவை அதிகம் நிகழ்கின்றன. ஆனால் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எலும்பு உடையும் விதம் முற்றிலும் மாறுபட்டது.

ஏனென்றால், பெரியவர்களின் எலும்புகள் முழு வளர்ச்சி பெற்று உறுதியாக இருக்கும். இதனால், எளிதில் இரண்டு துண்டுகளாக உடைந்து விடும். ஆனால், குழந்தைகளின் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாதவை மற்றும் மென்மையானவை (Soft bones). எனவே, குழந்தைகளின் வயதைப் பொறுத்து முறிவுகளின் தன்மை மாறுகிறது.

குழந்தைகளின் எலும்பு முறிவு வகைகள்

பிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரை: இவர்களின் எலும்புகள் பஞ்சு போல மென்மையாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கும். இவை கீழே விழும்போது உடையாமல், ஒரு ஸ்பாஞ்ச் அமுங்குவது போல வளைந்து கொள்ளும்.

மூன்று முதல் ஐந்து வயது வரை: இந்த வயதில் எலும்புகள் சற்று உறுதியாகத் தொடங்கும். முருங்கைக்காயை உடைப்பது போல ஒரு பக்கம் மட்டும் முறிந்து மறுபக்கம் உடையாமல் இருக்கும். இதனை “கிரீன் ஸ்டிக் பிராக்சர்” (Greenstick fracture) என்று அழைப்பார்கள்.

பெரிய குழந்தைகள்: இவர்களுக்கு எலும்புகள் ஓரளவுக்கு உறுதியாகி விடுவதால், பெரியவர்களைப் போல இரண்டு துண்டுகளாக உடைய வாய்ப்புகள் அதிகம்.

தோள்பட்டை எலும்பு முறிவைக் கண்டறிதல்

ஒன்று முதல் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெட்டிலிருந்து விழும்போது, பெரும்பாலும் அவர்களின் தோள்பட்டை எலும்பில் (Clavicle) முறிவு ஏற்படுகிறது. குழந்தைக்கு வீக்கம் வெளியே தெரியாவிட்டாலும், பின்வரும் அறிகுறிகளைக் கொண்டு அதனைத் தெரிந்துகொள்ளலாம்:

குழந்தை விடாமல் அழுவது.கையை மேலே தூக்க முடியாமல் போவது. உடை மாற்றும்போதோ அல்லது கையைத் தூக்கும்போதோ வலி அதிகமாகி அழுவது.

முதலுதவி வழிமுறைகள்:

குழந்தைக்கு அடிபட்டவுடன் பெற்றோர்கள் பதற்றத்தில் செய்யும் சில விஷயங்கள் பாதிப்பை அதிகப்படுத்தும். எனவே, எலும்புமுறிவு ஏற்பட்ட குழந்தைக்கு முதலுதவி செய்யும்போது பதற்றமடையாமல் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்:

செய்யக்கூடாதவை: அடிபட்ட இடத்தை மசாஜ் செய்வதோ, தேய்ப்பதோ அல்லது உருவிவிடுவதோ கூடாது. இப்படிச் செய்வது தசை சேதத்தையும், வீக்கத்தையும், வலியையும் அதிகப்படுத்தும். மேலும், எலும்பு முறியவில்லை என்பதைச் சோதிக்க குழந்தையை வலுக்கட்டாயமாக நடக்கச் சொல்லக்கூடாது.

செய்ய வேண்டியவை: அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் (Ice pack) வைக்கலாம். அந்த இடம் அசையாமல் இருக்க ஒரு அட்டையையோ (Cardboard) அல்லது துணியையோ கொண்டு சப்போர்ட் கொடுக்க வேண்டும்.

முதலுதவிகளைச் செய்த பிறகு, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் எக்ஸ்ரே (X-ray) எடுத்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைகளின் எலும்புகள் பெரியவர்களை விட வேகமாகச் சேரும் தன்மை கொண்டவை என்பதால், சரியான நேரத்தில் வழங்கப்படும் முதலுதவியும் சிகிச்சையும் எலும்புகள் கோணலாகக் கூடுவதைத் தவிர்க்க உதவும்.

சிகிச்சை முறைகள்

அனைத்து எலும்பு முறிவுகளுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படாது. குழந்தைகளின் எலும்புகள் பெரியவர்களை விடப் பல மடங்கு வேகமாகச் சேரும் தன்மைகொண்டவை. எனவே, பெரும்பாலான முறிவுகளுக்குச் சாதாரண மாவுக்கட்டு போட்டாலே போதுமானது.

அறுவை சிகிச்சை: எலும்புகள் மிக மோசமாக விலகி இருந்தாலோ அல்லது இரண்டு துண்டுகளாகப் பிரிந்து இருந்தாலோ, அவை கோணலாகக் கூடுவதைத் தவிர்க்கச் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். (உதாரணமாக கம்பி அல்லது ராடு வைப்பது) சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் கை அல்லது கால் வளைந்து போகவோ அல்லது நீளம் குறையவோ வாய்ப்புள்ளது.

மாவுக்கட்டு (Cast) போட்ட பிறகு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்:

எலும்பு கூடுவதற்கு ஆதாரம்: குழந்தைகளின் எலும்புகள் பெரியவர்களை விட பல மடங்கு வேகமாக கூடும் தன்மை கொண்டவை எனவே, உடைந்த எலும்புகள் சரியாகக் கூடும் வரை அதற்குத் தேவையான ஆதரவை (Support) வழங்கவே மாவுக்கட்டு போடப்படுகிறது.மேலும், எலும்பை நேர்படுத்தும் வகையில் எலும்பு விலகி இருந்தால், அதனைச் சரியான நிலையில் (Correct position) வைத்து மாவுக்கட்டு போட வேண்டும்.சில நேரங்களில் எலும்பை நேர்படுத்தும்போது வலி இருக்கும் என்பதால், லேசான மயக்க மருந்து கொடுத்து எலும்பை நேர்படுத்திய பின் மாவுக்கட்டு போடப்படும்.

சிகிச்சையின் அவசியம்: எலும்பு முறிவு கடுமையாக இருக்கும்போது மாவுக்கட்டு அல்லது முறையான சிகிச்சை அளிக்காவிட்டால், எலும்புகள் கோணலாகக் கூடவோ அல்லது கை, கால்கள் நீளம் குறையவோ வாய்ப்புள்ளது.

பொதுவாக மாவுக்கட்டு போட்ட பிறகு, அந்த இடத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய விரல்களை அசைத்துப் பார்க்க வேண்டும். மாவுக்கட்டு நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் வீக்கத்தைக் குறைக்க அந்த இடத்தை உயர்த்தி வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

விட்டமின் டி யின் அவசியம்

குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகள் (Muscles) வலுவாக இருக்கவும், அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கவும் விட்டமின் டி மிகவும் அவசியம். இந்தச் சத்து குறையும்போது எலும்புகள் பலவீனமடைந்து, குழந்தைகள் விரைவில் சோர்வடையக்கூடும் இதனை சரிசெய்ய குழந்தைகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் உடலில் சூரியஒளி படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதால் கிடைக்கும் இந்தச் சூரிய ஒளி, அவர்களின் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது.

தொகுப்பு:- ஸ்ரீதேவி குமரேசன்

 

Related Stories: