சக்ரேஸ்வரி யோகினியின் தோற்றம்
ஒரு அழகான பெண் வடிவில் காட்சி தரும் இந்த யோகினி, திருமாலைப் போல கருட வாகனத்தில் காட்சி தருகிறாள். தனது நான்கு கைகளிலும் சக்கராயுதத்தை தாங்குவதால் இவள் “சக்ரேஸ்வரி’’ என்று
அழைக்கப்படுகிறாள்.
ஜைன மதத்தில் சக்ரேஸ்வரி யோகினி
இந்த யோகினி பெரும் சக்திகளின் ஊற்றாக கருதப்படுகிறாள். அடியார்களை காப்பதில் தலை சிறந்தவளாக இருக்கும் இவளை, “யக்ஷினி’’ என்றும் அழைக்கிறார்கள். ஜைன மதத்தில் ‘அபராதிகாரா’ என்ற பெயரில் வழிபடப்படுகிறாள். இந்த யோகினியை பொன்னிறம் கொண்டவளாக, கருடன் மீது அமர்ந்தவளாக, எட்டு கரத்தோடு கூடிய வளாக ஜைனர்கள் வழிபடுகிறார்கள்.
வைஷ்ணவி தேவியும் சக்ரேஸ்வரி தேவியும்
சும்ப நிசும்பர்கள் என்ற அரக்கர்களை வதைக்க அம்பிகைக்கு அனைத்து தேவர்களும் தங்களுடைய சக்தியின் அம்சத்தை ஒரு தேவியாக தோற்றுவித்து, போரில் உதவி புரிய அனுப்பினார்கள். இப்படி மகாவிஷ்ணுவின் திரண்ட சக்தியில் இருந்த மகாவிஷ்ணுவை போலவே தோன்றியவள் வைஷ்ணவி தேவி. இந்த வைஷ்ணவி தேவி திருமாலைப்போல கருமை நிறம் கொண்டவளாக, எட்டுக் கரங்கள் கொண்டவளாக, சங்கு சக்கரம், வாள், வில், கதை போன்ற ஆயுதங்களோடு கூடியவளாக கருடன் மீது அமர்ந்தவளாக காட்சித் தருவதாக புராணங்கள் சொல்கின்றன. வைஷ்ணவி தேவிக்கும், சக்ரேஸ்வரி தேவிக்கும் உருவத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதால், வைஷ்ணவி தேவியின் ஒரு வடிவமே இந்த யோகினி என்று சொல்வார்களும் உண்டு.
கையில் இருக்கும் சக்கரம் எதை குறிக்கிறது?
இந்த யோகினியின் கையில் இருக்கும் பிரயேக சக்கரம், தீமையை அழித்து நன்மையை நிலை நாட்டி, நல்லவர்களுக்கு அருள் செய்கிறது. இரவு பகல் என்று நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் காலச் சக்கரம்தான் இந்த யோகினியின் கையில் ஆயுதமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு.
ஒரு நாளில் எப்படி இரவு என்றால் பகல் என்றும் ஒன்று உண்டோ, அது போலவே வாழ்வில் துன்பம் என்று ஒன்று இருந்தால், அதனைத் தொடர்ந்து இன்பம் வரும் என்பதை இது காட்டுகிறது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை உபாசிக்கும் அடியவர்கள் மனதில், வேரூன்றச் செய்கிறது. ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையை கலக்கம் இல்லாமல் வாழ முடிகிறது. இரவில் தோன்றிய இருளை, காலை வேளையில் வட்ட வடிவில் உதிக்கும் சூரியன் விலக்குவது போல, மனிதனின் மனம் அறியாமை என்னும் இருட்டில் மூழ்கி இருக்கிறது. அந்த இருளை அழிக்கும் ஞான சூரியனாக இவள் கையில் இருக்கும் சக்கரம் இருப்பதாக சொல்லப் படுகிறது.
திருமாலின் கையில் இருக்கும் சுதர்சனம், ஆயுதங்களின் தலைவனாக சொல்லப்படுகிறது. ஆகவே அது யந்திர ராஜம் என்று அழைக்கப்படுகிறது. அதி சக்தி வாய்ந்தது. பக்தர்கள் படும் பல விதமான இன்னல்களை நீக்கி, பில்லி சூனியம், ஏவல் போன்ற துஷ்ட சக்திகளை விரட்டி அடிப்பதில் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் இரண்டு கையிலும் சக்கரம் தாங்கிய இந்த தேவியும் துஷ்ட சக்திகளை அழிப்பதில் அதி சக்தி வாய்ந்தவளாக கருதப் படுகிறாள்.
இந்தச் சக்ரேஸ்வரி யோகினியின் கையில் உள்ள சக்கரங்கள் எதிரிகளை நிலைகுலைய வைப்பது. அதனால் பக்தர்களின் மனத்தில் ஆன்மிக அதிர்வலைகளை உருவாக்கவும் முடியும், யோகத் தடைகளை நீக்கவும் முடியும்.
குண்டலினி யோகமும் யோகினியும்
நமது உடலின் முதுகுத்தண்டின் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் குண்டலினி சக்தியானது இருக்கிறது. அதற்கு மேலே, சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞா, சஹஸ்ராரம் என்று ஏழு ஆதார சக்கரங்கள் இருக்கின்றன. இவை பஞ்ச பூதங்களையும் மன தத்துவத்தையும் குறிப்பதாக இருக்கிறது. ஒரு சாதகன், தன்னுடைய சாதனையில் முன்னேறும்போது, அவனுடைய குண்டலினி எழுந்து ஒவ்வொரு ஆதார சக்கரங்களையும் கடந்து உச்சியில் சஹஸ்ரார சக்கரத்தில் இருக்கும், இறைவனோடு இரண்டறக் கலந்து ஆனந்தம் அடைகிறது. இந்த யோக சாதனையில் சாதகனை ஒவ்வொரு ஆதார சக்கரங்களிலும் வழி நடத்துவதால் இந்த யோகினிக்கு சக்ரேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்வோரும் உளர்.
சக்கரத்தின் ரகசியம்
சக்கரம் உருளும் தன்மை கொண்டது. பாரமான பொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக மாற்ற உதவுவது. அதைப் போல, சக்ரேஸ்வரி யோகினி தன்னை முழுமையான நம்பிக்கையோடு வழிபடும் யோகிகளுக்கு வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்குவாள். அவர்களை மனித நிலையில் இருந்து தெய்வீக அந்தஸ்திற்கு உயர்த்துவாள் என்பது நம்பிக்கை.
சக்ரேஸ்வரி யோகினியும் அம்பிகையும்
புஷ்பங்களில் சிறந்தது ஜாதி மல்லி, புருஷர்களில் சிறந்தவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவள் ரம்பை. அந்த வகையில், எந்திரங்களில் சிறந்தது ஸ்ரீ யந்திரம் என்று சொல்லப் படக்கூடிய ஸ்ரீ சக்கரம்தான். யந்திரம் என்றாலே அது அம்பிகை வீற்றிருக்கும் ஸ்ரீ சக்கரம்தான் என்பதால், அதற்கு தனிப் பெயர் கிடையாது. மற்ற தெய்வங்களின் எந்திரத்துக்கு, சிவ யந்திரம், விஷ்ணு யந்திரம் என்று தனிப் பெயர் இருக்க, ஸ்ரீ சக்கரத்தை யாரும் அம்மன் யந்திரம் என்று சொல்வதில்லை. மரியாதையோடு ஸ்ரீ சக்கரம் என்றே சொல்லுகிறார்கள். அதாவது யந்திரம் என்றாலே அது ஸ்ரீ சக்கரம்தான். அதில் இல்லாத தெய்வங்களே இல்லை. அதில் இல்லாத மந்திரங்கள் இல்லை. அதில் இல்லாத உலகங்கள் இல்லை. இப்படி தன்னுள்ளே அனைத்தையும் அடக்கியது அந்த யந்திரம், அதன் பெருமையை அளவிட முடியாது.
இப்படி சக்கரங்களில் சிறந்த சக்கரமான ஸ்ரீ சக்கரத்தின் தலைவி என்பதால் அம்பிகைக்கு சக்ரேஸ்வரி என்ற திருநாமம் உண்டு. அந்த ஸ்ரீ சக்கரத்தில் ஒன்பது அடுக்குகள் இருப்பதாகவும், ஒவ்வொரு அடுக்கும் ஒரு சக்கரம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தந்த அடுக்குக்கு ஒரு தலைவி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இவர்களின் விவரங்களை தேர்ந்த குருவிடம் கற்றுக் கொள்வதே முறை. இப்படி ஒவ்வொரு அடுக்குக்கும் தலைவியாக இருக்கும் தேவதைகளை அந்த சக்கரங்களின் ஈஸ்வரி என்றும் சக்ர சுவாமினி என்றும் அழைக்கிறார்கள். இதை இந்த சக்ரேஸ்வரி யோகினியோடு நாம் சேர்த்து சிந்திக்கலாம்.
ஜி.மகேஷ்
