புதுக்கோட்டையில் அரசுப்பள்ளி திறக்கப்படாததால் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

புதுக்கோட்டை: விராலிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி காலை 9 மணி கடந்தும் திறக்கப்படாததால் மாணவர்கள் வெளியில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராலிமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு காவலாளி தற்போது நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த பள்ளியில் பணியாற்றி வந்த காவலாளி குறைவான சம்பளம் காரணமாக வேலையை விட்டு நின்றுவிட்டதால், தற்போது காவலாளி பணியிடம் காலியாக உள்ளதுடன், தலைமை ஆசிரியரே பள்ளியை பூட்டை திறக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வந்த மாணவர்கள் நீண்ட நேரம் பள்ளியின் முன்பு காத்திருந்தனர். காலை 9 மணி கடந்தும் பள்ளி திறக்கப்படாததால், பொறுமையிழந்த மாணவர்கள் அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்துக் உள்ளே நுழைந்தனர். பள்ளி மாணவர்கள் 40 நிமிடம் மேலாக வாசலில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமை ஆசிரியரின் இந்த அலட்சிய போக்கை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். மேலும் முறையாக மாவட்ட கல்வி நிர்வாகம் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: