×

விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்

பகுதி -4

விஷ்ணு புராணத்தின் படி, இந்த அண்டம் (பிரபஞ்சம்) உருவான விதம் மிகவும் நுணுக்கமான தத்துவங்களைக் கொண்டது. பஞ்சபூதங்கள் வெறும் மூலக்கூறுகளாக இருந்தபோது அவை ஒன்றிணைந்து ஓர் உருவத்தைப் பெற ‘பஞ்சீகரண’ செயல்முறையும், ‘மகத்’ தத்துவத்தின் தூண்டுதலும் அவசியமாகின்றன.சிருஷ்டிக்கு முன் அனைத்தும் ஒடுங்கி இருந்த நிலையில், பரமாத்வாவின் (விஷ்ணு) சங்கல்பத்தால் பிரகிருதி (இயற்கை) தூண்டப்படுகிறது. இதிலிருந்து முதலில் உருவாவது ‘மகத்’ என்னும் தத்துவம். இதுவே அண்டத்தின் ‘பேரறிவு’ அல்லது புத்தி என்று அழைக்கப்படுகிறது.

மகத் தத்துவத்திலிருந்து அகங்காரம் உருவாகிறது. இந்த அகங்காரம் மூன்று குணங்களாக (சத்வம், ராஜஸம், தாமஸம்) பிரிகிறது. இதில் தாமஸ அகங்காரத்திலிருந்து வரிசையாக ஐம்பூதங்களும் அவற்றின் தன்மைகளும் (தன் மாத்திரைகள்) தோன்றுகின்றன.

1. ஆகாயம் (சப்தம்)
2. வாயு (ஸ்பரிசம்)
3. தேயு/நெருப்பு (ரூபம்)
4. அப்பு/நீர் (ரசம்)
5. பிருதிவி/மண் (கந்தம்)

பஞ்சீகரணத்தின் அவசியம்

தொடக்கத்தில் இந்த பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ஆற்றலாக இருந்தன. அவை ஒன்றோடொன்று சேராதவரை ஒரு பருப்பொருள் அல்லது உடலை உருவாக்க முடியாது. இவற்றை ஒரு கலவையாக்கும் முறையே பஞ்சீகரண ரகசியம்.இதன்படி, ஒவ்வொரு பூதமும் இரண்டு பாதியாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பாதியைத் தனக்காக வைத்துக் கொண்டு, மீதிப் பாதியை மற்ற நான்கு பூதங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த ‘கூட்டுச் சேர்க்கை’யால் தான் நாம் காணும் நிலம், நீர், காற்று போன்றவை உருவெடுத்தன.

ஹிரண்ய கர்ப்பம் (பிரம்மாண்ட முட்டை)

மகத் முதல் பஞ்சபூதங்கள் வரை அனைத்தும் அந்தப் பரம்பொருளின் அருளால் ஒன்றிணைந்து, ஒரு மிகப்பெரிய முட்டை வடிவத்தை உருவாக்கின. இதுவே பிரம்மாண்டம் அல்லது ஹிரண்ய கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.இந்த அண்டமானது நீரால் சூழப்பட்டுள்ளது. நீரை நெருப்பும், நெருப்பை காற்றும், காற்றை ஆகாயமும், ஆகாயத்தை அகங்காரமும், அகங்காரத்தை மகத் தத்துவமும் உறையாகச் சூழ்ந்துள்ளன.

இந்த முட்டைக்குள் விஷ்ணுவே பிரம்மாவாகத் தோன்றி, பதினான்கு லோகங்களையும், தேவர், மனிதர் மற்றும் விலங்குகளையும் படைக்கிறார். இந்த பிரம்மாண்டம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலைத்திருக்கும். அதன் பிறகு, மீண்டும் உருவான வரிசைக்கு நேர்மாறாக (மண் நீரில் கரைந்து, நீர் நெருப்பில் ஒடுங்கி…) அனைத்தும் அந்த ஆதி நாராயணனிடமே ஒடுங்கும். இதையே ‘பிரளயம்’ என்கிறோம். பிரளயம் என்பது உலகம் அழிவதைக் குறிப்பது மட்டுமல்ல. அது ஒரு சுழற்சி (Cycle). படைக்கப்பட்ட அனைத்தும் மீண்டும் அதன் மூலத்துக்கே திரும்புவதை இது குறிக்கிறது.

பிரளயங்கள்

விஷ்ணு புராணத்தில் நான்கு வகையான பிரளயங்கள் விவரிக்கப் பட்டுள்ளன:

1. நைமித்திக பிரளயம்

இது ‘பிரம்மாவுடைய இரவு’ என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாவின் ஒரு பகல் முடிந்து இரவு தொடங்கும் போது இது நடக்கும் (ஒரு கல்பத்தின் முடிவு).பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களும் நெருப்பால் அழியும். பிறகு மழையினால் உலகம் நீரால் சூழப்படும்.இந்த நேரத்தில் படைப்புக் கடவுளான பிரம்மா தூங்குவார். மீண்டும் பிரம்மாவின் பகல் தொடங்கும் போது சிருஷ்டி மீண்டும் ஆரம்பமாகும்.

2. பிராகிருத பிரளயம்

இது ‘மகா பிரளயம்’ என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலம் (100 பிரம்ம ஆண்டுகள்) முடிவடையும் போது இது நிகழும்.இதில் பிரம்மா உட்பட அனைத்து தேவர்களும், உயிரினங்களும் மூலப் பிரகிருதியில் ஒடுங்குவார்கள். நிலம் நீரில் கரையும், நீர் நெருப்பில் ஒடுங்கும், நெருப்பு காற்றில் அடங்கும், காற்று ஆகாயத்தில் மறையும். இறுதியில் அனைத்தும் அந்த ஆதி நாராயணனிடம் ஒடுங்கும்.

3. ஆத்யந்திக பிரளயம்

இது ஒரு மனிதனின் தனிப்பட்ட விடுதலையைக் குறிக்கிறது. ஒரு யோகி அல்லது பக்தன் ஞானம் பெற்று, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு மோட்சம் அடைவதே ஆத்யந்திக பிரளயம். இது பிரபஞ்சத்திற்கு நடப்பதல்ல, தனி மனித ஆத்மாவிற்கு நடப்பது. அவித்யை (அறியாமை) நீங்கி, அந்த ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கும் நிலையாகும்.

4. நித்திய பிரளயம்

இது ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டிருக்கும் அழிவு. காலத்தின் ஓட்டத்தில் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும், உயிரினங்களும் நொடிக்கு நொடி மாற்றமடைந்து அழிந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு மனிதனின் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதியவை உருவா வது போல, பழையது மறைந்து புதியது தோன்றுவது நித்திய பிரளய மாகும். இது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும்.

காலப் பரிமாணம்

விஷ்ணு புராணத்தில் காலக்கணக்கு பற்றிய அற்புதமான விளக்கங்கள் இருக்கின்றன. காலம் என்பது என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் நமக்கு பல தத்துவங்கள் விளங்கிவிடும். காலம் என்பது வெறும் கடிகார முட்கள் அல்ல; அது விஷ்ணுவின் ஒரு வடிவம் (கால ரூபம்). பகவான் காலத்தின் மூலமாகவே உலகைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறார்.

விஷ்ணு புராணத்தின்படி, காலத்தின் மிகச்சிறிய அலகு ‘நிமேஷம்’ (கண் இமைக்கும் நேரம்). இதிலிருந்து தொடங்கி காஷ்டை, கலை, முகூர்த்தம் என உயர்ந்து மனிதர்களின் ஒரு பகல்/இரவு(நாள்) உருவாகிறது. 15 தினங்கள் ஒரு பருவம்.இரண்டு பருவங்கள் ஒரு மாதம்.6 மாதங்கள் கொண்டது ஒரு அயனம். இரண்டு அயனங்கள் ஒரு ஆண்டு.மனிதர்களின் ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒருநாள். இந்த கணக்கின்படி நான்கு யுகங்கள் அமைகின்றன:

1. கிருத யுகம்: 4,800 தேவ ஆண்டுகள்.
2. திரேதா யுகம்: 3,600 தேவ ஆண்டுகள்.
3. துவாபர யுகம்: 2,400 தேவ ஆண்டுகள்.
4. கலி யுகம்: 1,200 தேவ ஆண்டுகள்.

ஆக மொத்தம் 12,000 தேவ ஆண்டுகள் கொண்டது ஒரு சதுர்யுகம் (மகா யுகம்).71 சதுர்யுகங்கள் சேர்ந்த காலம் ஒரு மன்வந்தரம். ஒரு மன்வந்தரத்திற்கு ஒரு ‘மனு’ அதிபதியாக இருப்பார். இப்போது நாம் இருப்பது 7-வது மனுவான வைவஸ்வத மனுவின் காலத்தில். 14 மன்வந்தரங்கள் சேர்ந்தது ஒரு கல்பம். இது பிரம்மாவிற்கு ஒரு பகல் பொழுது (432 கோடி மனித ஆண்டுகள்).இதே அளவு காலம் பிரம்மாவிற்கு ஒரு இரவு.இப்படிப்பட்ட 360 பகல்-இரவுகள் சேர்ந்தது பிரம்மாவிற்கு ஒரு ஆண்டு.பிரம்மா இதுபோல 100 ஆண்டுகள் வாழ்வார். இது ‘பரார்தம்’ எனப்படும். இவ்வளவு நீண்ட காலத்தைக் கொண்ட பிரம்மாவே 100 ஆண்டுகளின் முடிவில் பகவானிடம் ஒடுங்கிவிடுகிறார்.

எறும்பு முதல் பிரம்மா வரை அனைவரின் ஆயுளையும் அந்த ‘கால ரூபியான’ விஷ்ணுவே தீர்மானிக்கிறார்.படைப்பு இருக்கும் வரை தான் ‘காலம்’ என்ற தத்துவம் செயல்படும். பிராகிருத பிரளயத்தில் காலம் என்ற தத்துவமும் பகவானுக்குள் ஒடுங்கி விடும். அதனால் தான் அவனை ‘காலாதீதன்’ (காலத்தைக் கடந்தவன்) என்று அழைக்கிறோம்.

நாம் இப்போது இருக்கும் காலம் பிரம்மாவின் ஆயுளில் 51-வது ஆண்டின் முதல் நாள். அதாவது ‘சுவேத வராக கல்பத்தில்’ இருக்கிறோம். பிரம்மா வின் ஆயுளில் முதல் பாதி (50 ஆண்டுகள்) முடிந்துவிட்டது, அந்தப் பகுதிக்கு ‘பூர்வ பரார்தம்’ என்று பெயர். இப்போது நடப்பது ‘இரண்டாம் பரார்தம்’.இறைவன் ஒருவனே மாறாதவன், மற்ற அனைத்தும் காலத்தின் ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை இந்த பிரம்மாண்டமான எண்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இறைவன் காலத்தின் மூன்று நிலைகளிலும் (இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) எப்படி நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை: கம்பன்

‘‘எப்பொழுதும் உளன்; எங்கணும் உளன்;
அப்பொழுதும், அவ்வமையம், அவ்விடத்தே…”

– என்று பாடுகிறார். இதன் மூலம், இறைவன் காலத்தின் ஒரு புள்ளியில் மட்டும் இருப்பவன் அல்ல, காலத்தையே ஒரு ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும் ‘‘காலாதீதன்” என்பதை கம்பர் உறுதிப்படுத்துகிறார்.புராணங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த காலக் கணக்கீடு (Time Dilataton), நவீன அறிவியல் கூறும் ‘சார்பியல் கோட்பாட்டோடு’ (Theory of Relativity) ஒத்துப் போவது வியப்பிற்குரியது அல்லவா?

காலத்தைப் பற்றி விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

(Theory of Relativity) எப்படி ஒத்துப்போகிறது என்று பார்ப்போம்.ஐன்ஸ்டீன் கூற்றுப்படி, காலம் என்பது பிரபஞ்சம் முழுவதும் ஒரே சீராக ஓடுவது கிடையாது. ஒருவருடைய வேகம் அல்லது அவர் இருக்கும் இடத்தின் ஈர்ப்பு விசை (Gravity) மாறும்போது காலம் ஓடும் வேகமும் மாறும்.

இதே கருத்தை விஷ்ணு புராணம் தெளிவாகச் சொல்கிறது. பூமியில் வாழும் மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே. பிரம்மாவின் ஒரு பகல் என்பது பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகள். அதாவது, பூமியை விட உயரிய லோகங்களில் காலம் மிக மெதுவாக நகர்கிறது.

ஐன்ஸ்டீன் ‘Space’ மற்றும் ‘Time’ ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாது என்று கூறினார். காலம் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்.விஷ்ணு புராணத்தில் சிருஷ்டியின் போது ‘காலம்’ ஒரு தனி சக்தியாக வெளிப்படுகிறது. படைப்பு இருக்கும் வரை தான் காலம் இருக்கும்; படைப்பு ஒடுங்கும்போது காலமும் இறைவனுக்குள் ஒடுங்கிவிடும்.கால நீட்டிப்புக்கு (Time Dilation) புராணங்களில் உள்ள மிகச்சிறந்த உதாரணம் ரேவதி மன்னனின் கதை:

ரேவதி மன்னன் தன் மகளுக்குத் தகுந்த வரன்தேடி, பிரம்ம லோகத்திற்குச் செல்கிறான். அங்கு பிரம்மா ஒரு இசை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அது முடியும் வரை மன்னன் சில நிமிடங்கள் காத்திருக்கிறான். நிகழ்ச்சி முடிந்ததும் பிரம்மாவிடம் தன் மகளுக்கு வரன் கேட்கிறான்.

பிரம்மா சிரித்துக்கொண்டே, ‘‘நீ இங்கே காத்திருந்த இந்தச் சில நிமிடங்களில், பூமியில் பல யுகங்கள் கடந்துவிட்டன. நீ நினைக்கும் நபர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை” என்கிறார்.
இது நவீன அறிவியல் கூறும் ‘Twin Paradox’ (விண்வெளிக்குச் சென்று வருபவருக்கு வயது குறைவாக இருத்தல்) என்ற கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.நவீன அறிவியலில் ‘Big Bang’ (பெருவெடிப்பு) மற்றும் ‘Big Crunch’ (மீண்டும் சுருங்குதல்) என்ற கோட்பாடுகள் உண்டு.

புராணங்களில்: இதையே நாம் ‘சிருஷ்டி’ மற்றும் ‘பிரளயம்’ என்கிறோம். பிரபஞ்சம் ஒரு முட்டை வடிவில் (அண்டம்) தோன்றி, விரிவடைந்து, இறுதியில் மீண்டும் ஒரு புள்ளியில் ஒடுங்குகிறது. இந்தச் சுழற்சி முடிவில்லாதது.அறிவியல் கருவிகளே இல்லாத காலத்தில், பிரபஞ்சத்தின் இவ்வளவு பெரிய ரகசியத்தை தத்துவார்த்தமாக நமது முன்னோர்கள் விளக்கியிருப்பது உண்மையில் ஆச்சரியமான ஒன்றுதான்!அறிவியல் ‘எப்படி’ (How) என்று கேட்கிறது.ஆன்மிகம் ‘ஏன்’ (Why) என்று கேட்கிறது. இவை இரண்டும் சந்திக்கும் புள்ளிதான் ‘‘காலத் தத்துவம்’’.

முனைவர் ஸ்ரீ ராம்

 

 

Tags : Vishnu ,
× RELATED வன்னிவேடு முருகனுக்கு பீட்ரூட் சாதப் பிரசாதம்