×

ஆனியில் பனித்துளி போல் மறைந்திடுமா நம் துன்பங்கள்?

இது வரை அவரது பகை வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்துவந்த சூரிய பகவான், மற்றொரு பகை வீடான மிதுன ராசிக்கு மாறி, அந்த ராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே “ஆனி மாதம்” என நாம் கொண்டாடி வருகிறோம். மிதுனமும், சூரிய பகவானுக்கு பகை வீடாகும்!

மிதுனம், கல்விக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதனின் ஆட்சி வீடாகும்!!இருப்பினும், சூரிய பகவானுக்கு, மிதுனம் பகை வீடாகும். இம்மாதம் முழுவதும், சூரிய பகவான் சஞ்சரிக்கும் மிதுன ராசிக்கு, இரண்டாம் ராசியான கடகத்தில், உச்ச நிலையில், குரு அமர்ந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.கடகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், தனது 5-ம் பார்வையாக, விருச்சிக ராசியையும் 7-ம் பார்வையாக மகர ராசியையும், 9-ம் பார்வையாக தனது ஆட்சி வீடான மீன ராசியை வைகாசி 12-ம் தேதியிலிருந்து (26-5-2026)-லிருந்து பார்வையிடுகிறார்!இதன் விசேஷ நற்பலன்களை இம்மூன்று ராசியினரும் அனுபவத்தில் பெற முடியும்.

“குரு பார்வை கோடி தோஷங்களைப் போக்கும்…!” என்ற மூதுரையும் உண்டு காலங்காலமாக!ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, 18 ஜனனகால தோஷங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கணித்துப் பார்த்து, மிகத் துல்லியமாகத் தெரிந்து கொண்டு, அவற்றிற்கேற்ப பரிகாரங்களை முன்கூட்டியே செய்து, வாழ்க்கையின் துன்பங்களைக் குறைத்துக் கொள்வதற்கு வழிவகுத்துக் காட்டுகிறது, “ஜோதிடக் கலை”!ஒவ்வொருவரின் ஜனன கால ஜாதகத்திலும் லக்கினம், பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ம் இடம் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய 6-ம் இடம், ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடம், விரய ஸ்தானமாகிய 12-ம் இடம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்துப் பார்த்து, ஆராய்ந்தால், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், எத்தகைய துன்ப அனுபவங்கள் நிகழவுள்ளன என்பதையும், அத்தருணங்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளும் நமக்குத் தெரியவரும்.

லக்கினத்திலிருந்து, 12-ம் இடமாகிய விரய ஸ்தானத்தை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் இறுதிக் காலமும் எவ்விதமாக இருக்கக்கூடும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.லக்கினம், பூர்வ புண்ணியம், ஆயுள், விரய ஸ்தானம் ஆகியவற்றைக் கணித்துப் பார்த்தால், ஆயுள் காலத்தையும், நாம் மிகத் துல்லியமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம் இவ்விதமாக ஒவ்வொருவரின் ஜனன கால கிரகங்களின் சஞ்சார நிலைகளைக் கொண்டு, அவரவரது வாழ்க்கையின் இன்ப – துன்பங்களையும், உயர்வு – தாழ்வுகளையும், உடல் ஆரோக்கியம் நோய்கள் ஆகியவற்றையும் மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளும் கணித முறையே “வேத ஜோதிடம்” ஆகும்.
“ஜோதிடம்” என்னும் துல்லிய கணித முறை, யஜூர் வேதத்திலும், பல பரிகார முறைகளை அதர்வ வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன.

கிரகங்களின் சஞ்சார நிலைகளினால், மனித வாழ்க்கையில் ஏற்படும் மேடு பள்ளங்களை மிகச் சரியாக முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் கணித முறையே “ஜோதிடம்” என்பது!பல பரிகார முறைகள் அதர்வ வேதத்தில் உள்ளன.

பிற்காலத்தில், எழுதப்பட்ட ஏராளமான நூல்களில், கிரக தோஷ ஜோதிடப் பரிகார முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.ஒருகாலத்தில், பாரதப் புண்ணிய பூமியின் விலைமதிக்க இயலாத ஏராளமான நூல்கள் இயற்றப்பட்டன. ஆயினும், பல அந்நியர்களின் படையெடுப்புகளின் விளைவாக, நமது கலாசாரம், பண்பு, வாழ்க்கை நெறிமுறைகள், கல்வி ஆகியவை காலப் போக்கில் அழிந்துபோயின. அவற்றின் விளைவாக, அதன் முக்கியத்துவமும் அந்நியர்களின் ஆட்சியின் விளைவாக, அழிந்து போயிற்று.இருப்பினும், நமது கலாசாரம், பண்பு, வாழ்க்கை நெறிமுறை ஆகியவற்றிலிருந்து வேதம், ஜோதிடம், ஆன்மிகத்தை அடியோடு புறக்கணிக்க இயலவில்லை!

பல ஜெர்மானிய அறிஞர்கள் நம் நாட்டிற்கு விஜயம் செய்த போது, நமது கலாச்சார உயர்வினைக் கண்டு, வியந்து, ஏராளமான ஓலைச் சுவடிகளை அந்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.இங்குள்ள மொழிகளின் பெருமைகளை அறிந்த ஜெர்மனி நாட்டின் பேரறிஞர்களும், விஞ்ஞானிகளும், மாமன்னர்களும் பல விலைமதிக்க இயலாத சுவடிகளையும், நூல்களையும் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.அம்மொழியில் புதைந்து கிடந்த விலை மதிக்க இயலாத அறிவுப் பொக்கிஷங்களை நாம் நிரந்தரமாகவே இழந்துவிட்டோம்.இதற்கு உதாரணமாக, ஒரேயொரு நிகழ்ச்சியை இங்கு கூற விரும்புகிறோம்.

அணு குண்டைக் கண்டுபிடித்த ஜெர்மன் விஞ்ஞானியான, “ஓபன் ஹீமர்”, உலகின் முதல் அணுகுண்டை வெடிக்கச் செய்து சோதித்தபோது, மஹாபாரத யுத்தத்தின், “ஆக்னேயா அஸ்திர”த்தையே தன் மனம் நினைத்திருந்ததாகக் கூறுகிறார்.அவரது அணுகுண்டை ஜப்பான் நாட்டில் வெடிக்கச் செய்த போது, வானளாவிய விஷப் புகை மூட்டம் (Mushroom cloud) எழும்பியபோது, தனது மனம், மஹாபாரதப் போரில் விவரிக்கப்பட்டுள்ள, “அக்னீயாஸ்திரத்தை” நினைத்தது எனக் கூறியுள்ளார்!இவ்விதம், வான சாஸ்திரத்தின் பல சூட்சுமங்களையும், ரகசியங்களையும், அதன் உண்மைகளையும் ஜோதிடக் கலை தன்னுள் கொண்டு விளங்குகிறது.இவ்விதம் பலபல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நமது வேத கால மகரிஷிகள் வான வெளியில் சதா சுழன்று கொண்டிருக்கும்

கிரகங்களுக்கும், நமது மானிட வாழ்க்கையின் சூட்சுமங்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்து, நமது நன்மைகளுக்காக வெளிப்படுத்தியுள்ளனர். இனி, இந்த ஆனி மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை கிரக சஞ்சாரங்களின் அடிப்படையில் காண்போமா?இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்!

ஆனி 1 (15-6-2026) திங்கட்கிழமை – ஆனி மாதப் பிறப்பு. ஷடசீதி புண்ணியக் காலம். மறைந்த முன்னோர்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். மேலும், இன்ைறய தினம் புன்னாக கௌரி விரதம். இவ்விரதத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள், அம்பாளை கலச கும்பத்தில் ஆவாஹனம் செய்வித்துவிட்டு, தேவி பாகவதம், லலிதா சஹஸ்ரநாமம், துர்கா ஸப்தஸதீ, சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி – இவற்றுள் எவையெவை உங்களால் முடிகிறதோ அவற்றைப் பாராயணம் செய்து, அல்லது சொல்லக் கேட்டோ பக்தி – சிரத்தையுடன் பூஜை செய்ய, வீட்டில் நிரந்தர நோயினால் அவதிப்படுபவர்களின் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவர். நோய்களிலிருந்தும் விரைவில் முக்கியமாக உடல் வலிகளிலிருந்தும் மிக எளிதாக விடுபடுவர். இதனை அனுபவத்தில் காணலாம்

ஆனி 2 (16-6-2026) செவ்வாய்க்கிழமை – சந்திர தரிசனம் – புண்ணியத்தைத் தரும்.

ஆனி 3 (17-6-2026) புதன்கிழமை – கதளி கௌரி விரதம் இந்த விரதத்தால் மணமாகாத கன்னிப் பெண்களின் அழகும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமுடன் கூடிய இன்முகத்துடன் பரிமளிப்பர். வெகு விரைவில், மனத்திற்கேற்ற மணாளன் அமையப் பெற்று, இல்வாழ்க்கையின் இன்பத்தில் அனுபவிப்பர்.

ஆனி 4 (18-6-2026) வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்.

ஆனி 5 (19-6-2026) வெள்ளிக்கிழமை – இந்நன்னாளில், ஆயில்ய நட்சத்திரத்தில்,ஸ்ரீ மாணிக்கவாசகர், திருவாசகத்தைச் சொல்லச் சொல்ல,ஸ்ரீ சிவபெருமான், தலையசைத்து, செவிசாய்த்து, கேட்டு எழுதிய நாள்.

ஆனி 6 (20-6-2026) சனிக்கிழமை – சஷ்டி விரதம். மேலும், இன்றைய தினத்தில், மக நட்சத்திரத்தில்ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் இறைவனுடன் இரண்டறக் கலந்த நாள்.

ஆனி 7 (21-6-2026) ஞாயிற்றுக்கிழமை – பானு ஸப்தமி. பகவான்ஸ்ரீ மந் நாராயணன், பக்தர்களை ரட்சிப்பதற்காக தசாவதாரம் எடுத்தருளினார். இவ்வவதாரத்திற்கு இணையானதாகவும், போற்றுதற்குரியதாகவும் ஆதி பராசக்தியானவள் தசா அவதாரங்கள் எடுத்தருளியதாக, “சியாமா ரஹஸ்ய” மகா மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆதிபராசக்தியானவள், பத்ரகாளி, தாரா, மஹாஷோடசீ (திரிபுரசுந்தரி), புவனேஸ்வரி, திரிபுர பைரவி, சின்ன மஸ்தா, தூமாவதி, மாதங்கீ, கமலா (மஹாலட்சுமி) இதுவே ஆதி பராசக்தியின் பத்து அவதாரங்களாகும்.இந்த அவதாரங்களில் தூமாவதி அம்சமானது, ஸ்ரீ மந் நாராயணனின் மத்ஸ்ய அவதாரத்திற்கு இணையானதாகவும், நவக்கிரகங்களில் ராகு – கேது தோஷங்களைப் பரிபூரணமாக போக்கடிக்கக்கூடியதாகவும் அமையப்பெற்றுள்ளது. இந்தத் தூமாவதி ஜெயந்தி தினத்தன்று நள்ளிரவில், கலச கும்பத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து, பக்தி – சிரத்தையுடன் பூஜித்தலும், தேவி பாகவதம் படித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும்கூட, அம்பாளின் திருக்கோயிலுக்கு மறுநாள் காலையில் சென்று, வழிபட்டு, ஒவ்வொரு அவதாரத்திற்கும் முறையே ஒரு மண் அகல் விளக்குகளாக பத்து மண் அகல் விளக்குகளில் பசு நெய் தீபமேற்றி வணங்கினால், சகல மங்களங்களும் உங்களை வந்தடைவது திண்ணம்.

ஆனி 8 (22-6-2026) திங்கட்கிழமை – ஆனித் திருமஞ்சனம்.ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம்.

ஆனி 10 (24-6-2026) புதன்கிழமை – பாபஹர தசமி

ஆனி 11 (25-6-2026) வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி. – உபவாசமிருப்பது, அனைத்து பாபங்களையும் போக்கிவிடும். மேலும், இன்றைய தினம்ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அவதரித்த ஸ்வாதி நட்சத்திரம். மேலும் இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்.

ஆனி 13 (27-6-2026) சனிக்கிழமை – சனிப் பிரதோஷம். மாலையில், சனிபகவானின் தரிசனம் கிரக தோஷங்களைப் போக்கும்.

ஆனி 14 (28-6-2026) ஞாற்றுக்கிழமை -ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அவதரித்த திதி – இந்நன்னாளில், மாக்கோலமிட்டு,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்வித்து,

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான்ஸ்ரீ ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:

என்ற மகா மந்திரங்களடங்கிய மேற்கூறிய ஸ்தோத்திரத்தை, ஒன்பது முறைகள் பக்தி – சிரத்தையுடன் படித்தோ அல்லது கேட்டோ வந்தால், எதிரிகளற்ற, பயமற்ற, கடன் தொல்லையற்ற வாழ்வாக அமையப்பெறும், நம் வாழ்நாள் முழுவதும்!

ஆனி 15 (29-6-2026) திங்கட்கிழமை – பௌர்ணமி விரதம் – மாத்ருகாரகரும், ஒவ்வொருவரின் மனதிற்கு அதிகாரம் படைத்தவரும் சந்திரனாவார்! இந்நாளில் மனிதனின் மனமாகியது புதிய உத்வேகம் கொள்ளும். ஆதலால்தான், இந்நாளில் மனப்பாதிப்பிற்குள்ளானவர்கள், சிந்திக்காமல் செயல்படுவர். நீர்நிலைகளுக்கு சந்திரபகவான்தான் காரகத்துவம் வாய்ந்தவர். அதனால்தான் இந்நாளில் கடல் அலைகள் பொங்குவதும், ஆழிப் பேரலைகள் வருவதும் இந்நாள்களில்தான்! இந்நாளில் காலை முதல் நிர்ஜலமாய் உபவாசமிருந்து ( உப + சமீபவாசம் = அதாவது, பகவானுக்கு அருகாமையில் – உடலளவிலும் மனத்தளவிலும்), மாலை நேரத்தில் சந்திர பகவானை தரிசித்த பிறகு,ஸ்ரீ சத்தியநாராயண பூஜை செய்வது உத்தமம். இவ்விதம் விரதமிருந்து பூஜிப்பவர்களுக்கு சகல – அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வதாக பகவானே சத்தியப்ரமாணம் செய்வித்து இருப்பதாலே இவ்விரதத்திற்கு ,”சத்தியநாராயண விரதம்” எனப் பெயர் காரணமாயிற்று. இவ்விரதத்தைப் பற்றி, ஸ்காந்த புராணம் சிலாகித்துக் கூறுகிறது. ஆகவே, இதனைக் கடைபிடித்து, மேன்மை பெறுவோம். மேலும், இன்று வடசாவித்ரி விரதம் – மணமான பெண்மணிகள் தீர்க்க சுமங்கலிகளாக, மனமொத்த தம்பதியராய், ஈருடல் ஓருயிராய் பரிமளிப்பர்.

ஆனி 17 (1-7-2026) புதன்கிழமை – ஜேஷ்ட பகுளப் பிரதமை.

ஆனி 18 (2-7-2026) வியாழக்கிழமை – திருவோண விரதம்.

ஆனி 19 (3-7-2026) வெள்ளிக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.

ஆனி 23 (7-7-2026) செவ்வாய்க்கிழமை – பாகவதாஷ்டமி – இந்நன்னாளில், காலைநேரத்தில் சிவபெருமானையும், பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில்ஸ்ரீ பைரவரையும் தரிசித்தோமேயானால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ அடியார்களுக்கு அல்லது பாகவதர்களுக்குச் செய்த அபவாதங்கள் அனைத்தும் விலகிடும். அவர்கள், நம் குற்றங்குறைகளைக் காணாது, நமக்காக நம்முடைய நலனிற்காக இறைவனிடம் பிரார்த்தித்து நமக்கு இக – பரசுகங்களை அனுபவிக்க வழிகோலுவர். இறைவன், தன்னை யாரேனும் பழித்தாலும் பொறுத்துக் கொள்வார். தன் பக்தர்களை யாரேனும், உடலளவிலோ அல்லது மனத்தினளவிலோ துன்புறுத்தினால் அதைச் சற்றேனும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதை அனைத்து இதிகாச புராணங்களிலும், கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே, எக்காரணத்தைக் கொண்டும் இறை பக்தர்களின் மனங்கோனும்படி நடத்தல் கூடாது. மேலும், கடன் சுமை வெகுவாகக் குறைவதை அனுபவத்தில் காண்பீர்கள்.

ஆனி 26 (10-7-2026) வெள்ளிக்கிழமை – கிருத்திகை விரதம் மற்றும் ஏகாதசி.

ஆனி 27 (11-7-2026) சனிக்கிழமை – ஏகாதசி மற்றும் தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப் பாற்கடலை, மந்தாகின என்ற மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்த போது,அம்மலையானது பாரம் தாங்காமல், கடலில் மூழ்கியபோது, எம்ெபருமான்ஸ்ரீ மந் நாராயணன், ஓர் ஆமை உருக்கொண்டு, அம்மலையை பாற்கடலின் மேற்புறத்தே கொணர்ந்தபோது எடுத்த அவதாரமே கூர்ம அவதாரம். இன்று கூர்ம ஜெயந்தி.

ஆனி 28 (12-7-2026) ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம். மாத சிவராத்திரி.

ஆனி 29 (13-7-2026) திங்கட்கிழமை – போதாயன அமாவாசை.

ஆனி 30 (14-7-2026) செவ்வாய்க்கிழமை – அமாவாசை. பித்ருக்களைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.

ஆனி 31 (15-7-2026) புதன்கிழமை – ஆஷாட சுத்தப் பிரதமை – மாலையில் சந்திர தரிசனம். மேலும், இன்றைய தினம்ஸ்ரீ அமிர்த லட்சுமி விரதம் – கலசம் வைத்து,நடுப்பகல் வேளை வரை உபவாசமிருந்து, குறைந்தபட்சம் மூன்று சுமங்கலிகளுக்கு அன்னதானமிட்டு, வெற்றிலை, பாக்கு, பழம் தாம்பூலத்தட்டுடன், (வசதிபடைத்தோர், சேலை அல்லது ரவிக்கைத் துண்டு கொடுத்து) மஞ்சள், குங்குமம், வளையல், புஷ்பம் கொடுக்க வேண்டும். இவ்விரதத்தைக் கைகொள்வார்க்கு, அனைத்துவித நோய்களிலிருந்து விடுபட்டு, சுக-வாழ்க்கை வாழ்வர் மேலும், இன்று வாராஹி நவராத்திரி ஆரம்பம். ஆனி 31-ந் தேதி முதல்(15-7-2026), ஆடி 06-ந் தேதி வரை

ஆனி 32 (16-7-2026) வியாழக்கிழமை – அமிர்த லக்ஷ்மி விரதம்.

Tags : Rishapha ,Mituna Rasi ,Ditunamum ,
× RELATED ஒளிமய வாழ்வருளும் வெக்காளியம்மன்