லாலாப்பேட்டை ஜூன். 15: லாலாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், மகாதானபுரம், சிந்தலவாடி, மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, கருப்பத்தூர் சுமார் 2500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை, சோளம் கம்பு உள்ளிட்ட பயிர்களையும் கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரக்காய், பூசணிக்காய், அவரை, மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைளையும் துவரை, கொள்ளு, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகளையும், விரிச்சிப் பூ, சின்னரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர் பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். இதில் பலர் காவிரி ஆற்றின் கிளை பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடி பாசன வசதியையும், பல்வேறு மாணாவரி நிலங்கள் நிலத்தடி நீரை நம்பியும் விவசாயம் செய்கின்றனர்.
இப்பகுதியில் விவசாயிகள் பெரும்பாலரும் இலவச மின் இணைப்புகள் பெற்று மும்மனை மின்சாரம் மூலம் ஆழ்துளை கிணற்றிலிருந்து நீரை எடுத்து விளைநிலங்களில் பாய்ச்சி பயிரிட்டு வந்துள்ளனர். இந்த இலவசம் மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் இருந்ததால் விவசாயிகள் எந்தவித சிரமமும் இன்றி பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.இந்நிலையில் தவெக அரசு ஆட்சி அமைத்த பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மும்முனை மின்சாரம் அப்பகுதியில் கிடைக்காமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது.தற்போது 15 மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. தற்போது காவிரி ஆற்றில் பாசன நீர் திறக்கப்படாமல் உள்ளதாலும், மேலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சல் முடியாமல் கருகு வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
