ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டை முதல் செம்மடைப்பட்டி வரை திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பைபாஸ் சாலை, மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் லெக்கையன்கோட்டை பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திண்டுக்கல்-பழநி தேசிய நெடுஞ்சாலையில் லெக்கையன்கோட்டையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பழநி கோட்டாட்சியர் கண்ணன், டிஎஸ்பி கார்த்திகேயன், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
