×

நாளை நள்ளிரவுடன் முடிகிறது மீன்பிடி தடை காலம்; கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்: பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் துறைமுகம்

 

ராமேஸ்வரம்: இரண்டு மாத மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைவதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால், துறைமுகங்களில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக கடலில் மீன்வள பெருக்கத்திற்காக இரண்டு மாத மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கம் போல் ஏப்.14ம் தேதி மீன்பிடி தடைகாலம் துவங்கியது. இதனால் வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

ராமேஸ்வரம் முதல் சென்னை வரை, பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தம் செய்யப்பட்டன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், உள்நாட்டு மீன் வர்த்தகமும் முடங்கியது. இந்த தடைகாலத்தில், கரை நிறுத்தம் செய்யப்பட்ட விசைப்படகுகளை பல லட்சம் ரூபாய் செலவு செய்து பழுதுநீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உட்பட தமிழக கரையோரத்தில் பெரும்பாலான படகுகள் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கடலுக்கு செல்வதற்கு தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடி தடைகாலம் நாளை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவடைவதால் படகுகளை கடலுக்கு அனுப்புவதற்கான ஆயத்த பணிகளில் படகு உரிமையாளர்களும், மீனவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாத கால மீன்பிடி தடையால் வேலை இழந்த மீனவர்கள் வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். இவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தடைகாலம் துவங்கியபோது படகுகளில் இருந்து இறக்கிய மீன்பிடி உபகரணங்களை மீண்டும் படகுகளில் ஏற்றுதல், புதிய வலை கட்டுதல், போட் பலகை, இழுவை கயிறு சுற்றுதல் போன்ற பணிகளில் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீன்பிடி துறைமுகம் மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது.

Tags : Rameshwaram ,Pombon ,Tamil Sea ,
× RELATED கிருஷ்ணகிரியில் மாணவிக்கு நேர்ந்த...