காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலு(60), டெய்லர். இவருக்கு தண்டபாணி என்ற மகனும், நிர்மலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேலு தனது மகன் வழி பேரன் அஜய்(9), பேத்தி குணஸ்ரீ(7) மற்றும் மகள் வழி பேரன் அஸ்வந்த்(8) ஆகியோரை நேற்று ஓச்சேரியில் இருந்து மொபட்டில் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
காவேரிப்பாக்கம் அருகே சென்னையில் இருந்து ஐஸ்கிரீம் ஏற்றி வந்த வேன், திடீரென முன்னால் சென்ற மொபட் மீது மோதியது. இதில் வேலு, அஜய், குணஸ்ரீ, அஸ்வந்த் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அதில் குணஸ்ரீ, வேலு, அஸ்வந்த் ஆகியோர் உயிரிழந்தனர். அஜய் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து, போளூரை சேர்ந்த வேன் டிரைவர் ஜெயசூர்யாவை(28) கைது செய்தனர்.
