×

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சென்னை: மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியை கிட்டத்தட்ட கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இந்த சூழலில் விவசாயிகளை காப்பாற்ற டெல்டா பாசனப் பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அதனால் உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் 2024-ஆம் ஆண்டைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டில் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு அணையின் மொத்தக் கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் பாதிக்கும் குறைவாக 41.64 டி.எம்.சி மட்டுமே இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்படவில்லை என்று
கூறியுள்ளார்.

ஜூன் 4-ஆம் தேதி கேரளத்திலும் பெய்யத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து முன்னேறாமல் முடங்கி விட்டது. அடுத்த இரு வாரங்களுக்கு தென் மேற்கு பருவமழை கேரளம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் ஆகஸ்ட் மாத பின்பகுதிக்கு முன்பாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இல்லை.

கடந்த சில வாரங்களாக தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இந்த நெருக்கடியான சூழலில் இருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்காக, காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக குறைந்தது 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளின் வாயிலாக காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்தபட்ச அளவிலாவது குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதையும், உழவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Tags : Delta ,Anbumani Ramadas ,Chennai ,Mattur Dam ,Bhamaka ,president ,
× RELATED ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு...