திருப்பூர் மாவட்டம் மன்னரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(39). இவர் சென்னையில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் டீ சாப்பிடுவதற்காக பேருந்தை டிரைவர் நிறுத்தி உள்ளார். டீ சாப்பிடுவதற்காக ஜெயக்குமார் அவரது பையை பேருந்து சீட்டில் வைத்துவிட்டு இறங்கியுள்ளார்.
அப்போது பேருந்தில் இருந்த மர்ம நபர் ஒருவர், பையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான லேப்டாப்பை திருட முயற்சி செய்துள்ளார். இதனை வெளியில் டீ அருந்தியபடி கவனித்த ஜெயக்குமார் கூச்சலிட, அங்கிருந்த சக பயணிகள் அந்த நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் லேப்டாப்பை அவரிடமிருந்து பறிமுதல் செய்த பயணிகள் அவரை விக்கிரவாண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபர் திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி அண்ணா நகரை சேர்ந்த குமார் மகன் கண்ணப்பன்(32) என்பதும், தவெக செயலாளர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழித்தட தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிவதும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து கண்ணப்பனை கைது செய்தனர்.
