* சென்னை கிரைம் பிரிவு சிஆர் 16 ரிப்போர்ட்டிங் சார்; டிஐஜியை மிரள வைத்த ‘காக்கி திருடி’
வேலூர்: வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று முன்தினம் மாலை இளம்பெண் ஒருவர் டிஎஸ்பி சீருடையில் வலம் வந்தார். அப்போது அங்கு வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பெண் டிஎஸ்பியை பார்த்ததும் போலீசார் சல்யூட் அடித்துள்ளனர். அதற்கு அவரும் வணக்கம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் வடக்கு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் எஸ்ஐ ரேகா ஆகியோர் வந்து டிஎஸ்பி சீருடையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அவர், சென்னை கிரைம் பிரிவு டிஎஸ்பி என தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் தனது பாய் பிரண்டுக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாட வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், அவர் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33). இவரது கணவர் கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உமாமகேஸ்வரி 10ம் வகுப்பு வரை படித்து உள்ளார். பல்வேறு இடங்களில் வீட்டு வேலை செய்ததும் தெரியவந்தது. இந்த விசாரணையின்போது, வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வேலூர் சரக டிஐஜி மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலி டிஎஸ்பி உமா மகேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை பார்த்த டிஐஜி என்ன வழக்கு என்று விசாரித்துள்ளார். அப்போது டிஐஜி மகேஷ் போலி டிஎஸ்பியை பார்த்து எந்த ஊர் டிஎஸ்பி என கேட்டுள்ளார். அதற்கு அவர் கொஞ்சம் கூட தயக்கம் இன்றி சாதாரணமாக சென்னை கிரைம் பிரிவு சிஆர் 16 என தெரிவித்துள்ளார். உடனடியாக டிஐஜி இந்த பெண்ணை தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு கிளம்பினார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: உமாமகேஸ்வரி சில மாதங்களுக்கு முன் சென்னையில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார்.
அப்போது அங்கு நகை பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளார். உரிமையாளர் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். இதேபோல் சென்னையில் வசிக்கும் இவரது உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரை நலம் விசாரிக்க சென்றபோது நகை, பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாகவும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர் மீது வடபழனி, பூக்கடை காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. தொடர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அணைக்கட்டு அருகே மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் நண்பராக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி கொண்டாட மாலையில் சொந்த ஊரில் இருந்து டிஎஸ்பி சீருடை அணிந்து பஸ்சில் வேலூருக்கு வந்துள்ளார். பின்னர் கேக் வாங்கிக் கொண்டு கோட்டை பூங்காவில் கொண்டாட வந்துள்ளார். ஆனால் அவரது பாய் பிரண்ட் சென்னைக்கு லாரியில் சரக்கு ஏற்றி சென்றதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருடைய பாய் பிரண்டை செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது அவருக்கு பிறந்த நாள் என்பதும் அவர் கேக் வெட்டி கொண்டாட வர இருந்ததும் தெரியவந்தது. இதனால் உமாமகேஸ்வரி தனது ஆண் நண்பரை இம்ப்ரஸ் செய்து கவரும் வகையில் டிஎஸ்பி சீருடை அணிந்து வந்துள்ளார். இந்த சீருடையை இரு தினங்களுக்கு முன்பு வேலூரில் வாங்கி வைத்திருந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து போலி பெண் டிஎஸ்பி மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
