புதுடெல்லி: துல்லிய தாக்குதல் திறன் கொண்ட 106 டர்போஜெட் டிரோன்களை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்து ராணுவத்திடம் வழங்கி உள்ளது. இந்திய பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான எஸ்எம்பிபி நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘இந்திய ராணுவத்திற்கு 106 உள்நாட்டு தயாரிப்பான பீஸ் கீப்பர் (அக்னிவேக்) ரக டர்போஜெட் டிரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 100 டிரோன்கள் தாக்குதலுக்கும், 6 டிரோன்கள் பயிற்சிக்காகவும் பயன்படுகின்றன. இந்த டிரோன்கள் மணிக்கு 450 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியவை.
180 கிமீ தொலைவு வரை சென்று தாக்கக் கூடியவை. இலக்குகளை 5 மீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டவை. சிக்னல்கள் முடக்கப்படும் மற்றும் திசைதிருப்பப்படும் கடுமையான சூழல்களிலும் தடையின்றி இயங்கும் திறன் கொண்டவை. இது இந்தியாவின் டிரோன் போர் திறன்களில் குறிப்பிடத்தக்க மைல்கல். மேலும் முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தற்சார்பு அடைவதற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது’’ என கூறப்படுகிறது.
