ஓமன் துறைமுகத்திற்கு அருகே தாக்குதல் 3 இந்திய மாலுமிகள் பலி: மேலும் ஒரு இந்திய கப்பலை தாக்கி அமெரிக்க கடற்படை அட்டூழியம்

துபாய்: ஓமன் துறைமுகத்திற்கு அருகே இந்தியர்கள் இருந்த 3வது எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், கப்பலில் இருந்த 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவின் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலியான அடுத்த நாளே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த பிறகு, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகம் நடக்கக் கூடிய பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி சிக்கலுக்குள்ளாகி உள்ளது.

இதன் ஒருமுனையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து கப்பல்களை வெளியேற விடாமல் முடக்குகிறது. மறுமுனையில், ஈரான் துறைமுகத்திலிருந்து எண்ணெய் எடுக்க செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படை அனுமதிக்காமல் தடுக்கிறது. இதற்கிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் தாக்குதல் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த ஒருவாரமாக ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

அமெரிக்காவின் அனுமதியின்றி இப்பகுதியில் நுழையும் கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்தியர்கள் உள்ள எண்ணெய் கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 8ம் தேதி ஓமன் கடல் பகுதிக்கு அருகே பலாவ் நாட்டு கொடியுடன் இயங்கிய எம்டி மரிவெக்ஸ் என்ற வணிக கப்பல் மீது அமரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் கப்பல் தீப்பிடித்ததில் 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஓமன் கடல் பகுதியில் பலாவ் நாட்டு கொடியுடன் சென்ற எம்டி செட்டபெல்லோ என்ற வணிக கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியாவுக்கான அமெரிக்க தற்காலிக தூதர் ஜேசன் மீக்சுக்கு சம்மன் விடுத்து அவரை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஓமனின் ஷினாஸ் துறைமுகத்திற்கு அருகே நேற்று இந்தியர்கள் இருந்த 3வது கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. கினியா-பிசாவ் கொடியுடன் கூடிய எம்டி ஜல்வீர் என்ற வணிக கப்பல் மீது அமெரிக்க கடற்படை விமானம் குண்டுவீசி தாக்கி உள்ளது. இதில் கப்பலின் இன்ஜின் பகுதி தீப்பிடித்து பெரும் புகை வெளிவரும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன.

உடனடியாக, ஓமன் கடலோர காவல் படையினர் மீட்பு படகு மூலம் விரைந்து ஜல்வீர் கப்பலில் இருந்த 22 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். இத்தகவலை ஓமனின் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகமும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளன. இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், ‘‘கடந்த 4 நாளில் இந்தியர்கள் இருந்த 3வது கப்பலை அமெரிக்கா தாக்கி உள்ளது.

எங்கள் கடல்சார் சமூகத்தினரின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்’’ என்றார். மேலும், வணிக கப்பல்கள் மீதான கப்பல்கள் மிகுந்த கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரம் அமெரிக்காவிடம் தீவிரமாக கொண்டு செல்லப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட கப்பல்களில் 2 அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டு இயங்கி வந்ததாகவும், மற்றொன்று விதிமுறைகளுக்கு இணங்காத வகையைச் சேர்ந்தது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தொடர் தாக்குதலால், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதோடு, ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதும் சிக்கலாகி உள்ளது. இது உள்நாட்டு கச்சா எண்ணெய் தேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

* உத்தரவை மீறியதால் தாக்குதல் நடத்தினோம்
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘‘கினியா-பிசாவ் கொடி ஏந்திய எம்டி ஜல்வீர் கப்பல் ஈரானிய எண்ணெயை கொண்டு செல்ல முயன்றது. இது ஈரானுக்கு எதிரான முற்றுகை நடவடிக்கையை மீறும் செயல் என்பதால் எச்சரிக்கை விடுத்தோம்.

ஆனால் அமெரிக்க படைகளின் உத்தரவுகளை அக்கப்பலில் இருந்த பணியாளர்கள் பின்பற்றத் தவறினர். இதனால் அமெரிக்க விமானம் கப்பலின் இயந்திர அறையை தாக்கியது’’ என கூறியது. இந்திய மாலுமிகளைக் கொண்ட கப்பல்களை தாக்கியதை அமெரிக்கா ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறை.

* பலியானவர் ஆந்திராவை சேர்ந்தவர்
* நேற்று முன்தினம் தாக்குதலுக்கு உள்ளான எம்டி செட்டபெல்லோ கப்பலில் பலியான 3 இந்திய மாலுமிகளில் ஒருவர் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 44 வயது மரைன் இன்ஜினியர் சுரேஷ் பட்னாலா என்பது உறுதியாகி உள்ளது.
* எம்டி செட்டபெல்லா கப்பலில் இருந்து 3 இந்தியர்கள் மாயமானதாக முதலில் தகவல் வெளியான நிலையில் அவர்கள் பலியானதை ஒன்றிய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று உறுதி செய்தார்.
* ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த ஏப்ரல் 13ல் முற்றுகை தொடங்கியதில் இருந்து அமெரிக்க படைகள் விதிமுறைக்கு இணங்காத 9 கப்பல்களை சுட்டு வீழ்த்தி உள்ளன. விதிமுறைக்கு இணங்கிய 135 கப்பல்களை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளன. மனிதாபிமான உதவிகளை வழங்கும் 42 கப்பல்கள் இப்பகுதியை கடக்க அனுமதித்துள்ளன.

Related Stories: