×

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை:பயணிகள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் 1 பேருந்தில் செல்ல வேண்டிய 40 பயணிகள் 40 தனியார் வாகனத்தில் கிளாம்பாக்கம் வரை செல்கிறார்கள். இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபனை இன்று சந்தித்த பிறகு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இது சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.150 ஆக உள்ளது. இதை ரூ.500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயர்த்தக் கூடாது. மேலும், போக்குவரத்துத் துறையின் அனைத்து சேவைகளும் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட வேண்டும். ஆன்லைன் சேவைகள் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் தேவையற்ற தாமதங்களை தவிர்க்க முடியும். குறிப்பாக வாகனங்களுக்கான சிறப்பு எண் ஒதுக்கீட்டு நடைமுறையை ஆன்லைன் மூலம் செயல்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம். முன்பு சிறப்பு எண் பெற டீலர்கள், ஏஜெண்டுகள் உள்ளிட்டோரின் உதவியை நாட வேண்டிய சூழல் இருந்தது. அதற்காக ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை கூடுதல் செலவாகி வந்தது. எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக விண்ணப்பித்து பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Koyambedu ,Omni Bus Owners Association ,Chennai ,Glampakkam ,
× RELATED மன்னார்குடி அருகே கார் மோதிய விபத்தில் 4 அரசு பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு