கிருஷ்ணகிரி, ஜூன் 11: உலக கோணல் கால்(கிளப் ஃபுட்) தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் துறை சார்பில், விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சத்தியபாமா தலைமை தாங்கி கிளப் ஃபுட் சிகிச்சை பெற்று பயனடைந்த குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி, அவர்களையும் அவர்களது பெற்றோரையும் பாராட்டி வாழ்த்தினார். மேலும், கிளப் ஃபுட் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிளப் ஃபுட் குறைபாட்டிற்கு வெற்றிகரமாக சிகிச்சை பெற்று பயனடைந்த 20 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது சிகிச்சை அனுபவங்களையும், சிகிச்சையின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ் மற்றும் எலும்பியல் துறைத் தலைவர் மகேஷ்ராம், நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
