கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சுதந்திர தின விருதிற்கு இணையதளம் மூலம் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை பெற விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும்.
18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிப்புரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், ஆண்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். இவ்விருதிற்கு தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் //awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
