மும்பை: ஒன்பது ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு நடிகை ஹுனர் ஹாலி தனது கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார். சின்னத்திரை நடிகை ஹுனர் ஹாலி மற்றும் மயங்க் காந்தி ஆகியோருக்கு கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. சுமார் 9 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் சட்டப்படி பிரிவதற்கு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், ஜீவனாம்சம் மற்றும் சொத்து பங்கீடு தொடர்பான சில பிரச்னைகளால் இறுதி தீர்ப்பு தள்ளிப்போனது. இருப்பினும், இருவரும் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்ததை அடுத்து, திருத்தப்பட்ட உடன்படிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் நேற்று இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியான சமயத்தில், நடிகை ஹுனர் ஹாலி ஒரு டிவி தொடருக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார்.
ஒரு முக்கிய காட்சியில் நடித்து முடித்த பிறகு, தனது செல்போனை பார்த்த அவருக்கு வக்கீல் குழுவிடம் இருந்து விவாகரத்து கிடைத்த தகவல் குறுஞ்செய்தியாக வந்தது. இதைப் பார்த்ததும் நிலைதடுமாறிய அவர், படப்பிடிப்பு தளத்திலேயே சக கலைஞர்கள் முன்னிலையில் தேம்பித் தேம்பி அழுதார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் ருக்வேத் மோர் கூறுகையில், ‘நீதிமன்றம் விவாகரத்து மனுவை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் சுமூகமான முறையில் தம்பதிக்கு விவாகரத்து கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

