×

4 மானிய சமையல் எரிவாயு உருளைகளாக குறைப்பு; பாஜக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிறது: ஜவாஹிருல்லா அறிக்கை

 

சென்னை: 4 மானிய சமையல் எரிவாயு உருளைகளாக குறைப்பு; பாஜக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிறது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெண்களின் முன்னேற்றம், ஏழை மக்களின் நலன், புகையில்லா சமையலறை என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டு, மறுபுறம் அந்தத் திட்டங்களின் பலன்களை படிப்படியாகப் பறித்துக் கொள்வது பாஜக அரசின் இரட்டை முக அரசியலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆண்டுக்கு 12 மானிய விலை சமையல் எரிவாயு உருளைகள் (எல்பிஜி சிலிண்டர்கள்) வழங்கப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று அந்த வாக்குறுதி சுருங்கிச் சுருங்கி வெறும் 4 மானிய உருளைகளாக குறைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் “பெண்கள் நலன்” என்று மேடைகளில் மட்டும் முழங்கும் பாஜக அரசு, மறுபுறம் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தி, மானியத்தை வெட்டிக் குறைத்து, ஏழை குடும்பப் பெண்களை மீண்டும் விறகு அடுப்பின் புகைக்குள் தள்ளுவது எந்த வகையான சமூக நீதியாகும்?

மத்திய அரசின் கொள்கைகளால் ஏற்கனவே பல கோடி உஜ்வாலா பயனாளிகள் உருளைகளை நிரப்ப முடியாமல் தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் நேரடி பாதிப்பு பெண்களின் உடல்நலம், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது விழுகிறது. “பெண்களுக்கு அதிகாரமளிக்கிறோம்” என்று ஒரு குரலில் பேசிவிட்டு, “அவர்களுக்கான மானியங்களையும் நலன்களையும் குறைக்கிறோம்” என்று இன்னொரு வகையில் செயல்படுவது பாஜக அரசின் இரட்டை வேடத்தை மட்டுமே காட்டுகிறது.

இது தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு அதை மறந்துவிடும் அரசியலின் இன்னொரு எடுத்துக்காட்டாகும். 100 நாள் வேலைத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட சுருக்கம் முதல், எரிவாயு மானியக் குறைப்பு வரை, ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய திட்டங்களே ஒன்றன்பின் ஒன்றாக பலவீனப்படுத்தப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.

எனவே, பெண்கள் மற்றும் ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளை வழங்கப்படும் என்ற ஆரம்ப வாக்குறுதியை முழுமையாக மீண்டும் அமல்படுத்தவும், சமையல் எரிவாயு விலையைக் குறைத்து, மக்களின் சுமையைக் குறைக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

விளம்பரத்தில் ஒரு முகம், நடைமுறையில் இன்னொரு முகம் என்பதே பாஜக அரசின் உண்மையான அடையாளம் என்பதை இந்திய மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : BJP government ,Jawahirullah ,Chennai ,MH Jawahirullah ,Humanity People's Party ,MLA ,
× RELATED பாஜக மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா...