×

கோரிக்கையை சென்னை ஐகோர்ட் ஏற்க மறுத்த நிலையில் பழைய காதலி மனைவியானதால் 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் அதிரடி

 

புதுடெல்லி: பழைய காதலி மனைவியானதால் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவரை காதலித்தார். ஆனால் அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், மாணவி அளித்த புகாரின் பேரில் 2019ம் ஆண்டில் அந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் பலாத்கார குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்தது.

ஆனால் கடந்த கால உறவு குறித்து அறிந்த அவரது கணவர், திருமணமான 3 நாட்களிலேயே அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றார். சிறை தண்டனை பெற்ற இளைஞர் ஜாமீனில் வெளியே வந்தபோது, அவருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே மீண்டும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ முடிவெடுத்தனர். பின்னர் தனது கணவர் மீதான தண்டனையை ரத்து செய்யக்கோரி அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருவரும் சமரசமாகி இணைந்து வாழ்வதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரினார். ஆனால் உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த தம்பதியினர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண், பாதுகாப்பிற்காக 10 லட்சம் ரூபாய் பாதுகாப்பு தொகையை தனது கணவரிடம் கோரினார். அந்தத் தொகையை இளைஞர் வழங்கியதை உறுதி செய்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இளைஞரின் தண்டனையை ரத்து செய்தனர்.

மேலும், ‘அரிதிலும் அரிதான சூழலில் நடந்த இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இருவரும் சமூகத்தில் தம்பதிகளாக நிம்மதியாக வாழலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Tags : Chennai ,ICourt ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu ,
× RELATED மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் விஜய்..!!