பெரம்பூர், ஜூன் 8: சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி தாமோதரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சரித்திர பதிவேடு ரவுடி ஒருவர் பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். போலீசார் அவரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் 30 வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், வியாசர்பாடி தாமோதரன் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீநாத் என்கின்ற மூச்சு (23) என்பதும், சரித்திர பதிவேடு ரவுடியான இவர் வலி நிவாரண மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீநாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
