தாம்பரம், ஜூன் 6: தாம்பரம் தலைமை சிக்னல் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறநகர் ரயில் சேவை 1 மணிநேரம் பாதித்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையிலும் தினமும் இயக்கப்படும் ஏராளமான மின்சார ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், நோயாளிகள், தொழிலாளர்கள் அதிகளவில் இந்த ரயில் சேவையை நம்பி உள்ளனர். இதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் வழியாகவும், தாம்பரத்தில் இருந்தும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தலைமை சிக்னல் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சிக்னல்கள் அனைத்தையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்களுக்கு சிக்னல் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. செங்கல்பட்டு மார்க்கத்திலிருந்து தாம்பரம் நோக்கி வந்த ரயில்கள் அனைத்தும் பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி என ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்களும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் என ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
இதனால் காலை நேரத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ரயில்கள் மூலம் வேலைக்கு சென்றவர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தாம்பரம் ரயில் நிலையத்திற்கு நடந்து வந்து சேர்ந்தனர். மேலும், ரயில் சேவை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ரயில்வே அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காததால் பொதுமக்கள் அனைவரும் ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘தொடர்ந்து அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் மின்சார ரயில்கள் முறையாக இயக்கப்படுவதில்லை, ரயில்வே அதிகாரிகள் முறையான பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. வழக்கமாக பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என ரயில்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் எதற்காக ரயில் இயங்கவில்லை என தெரியாமல் பயணிகள் பரிதவித்தனர். ரயில்வே அதிகாரிகளும் எதற்காக ரயில்கள் இயங்கப்படவில்லை என முறையாக அறிவித்திருந்தால் ரயில் நிலையத்தில் காத்திருக்காமல் பேருந்துகள் மூலமாக சென்றிருப்போம். அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக தொடர்ந்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
