திருவண்ணாமலை: திருச்செந்துர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாக அவரது உதவியாளரிடம் 4 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000 வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது. 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மற்றும் தரிசன டிக்கெட் ரூ.25 லட்சம் மோசடி தொடர்பாக கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 29ம் தேதி அம்மணி அம்மன் கோபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோயில் ஊழியர்கள் அவ்வழியாக வந்த ஆந்திர மாநில பக்தர்களிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, 5 நபர்களுக்கு தலா ஆயிரம் விதம் ரூ5 ஆயிரத்தை அழைத்துச் செல்லும் நபரிடம் கொடுத்திருப்பதாகவும், சிறப்பு தரிசனத்திற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். கையும் களவுமாக பிடிபட்டதை அறிந்த இடைத்தரகர், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். இந்நிலையில், இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
