பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

குறிப்பாக மருத்துவப் பணிகள் மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், அரசு வட்ட மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் கடுமையான மருத்துவர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள், புதிய பிரிவுகள் மற்றும் பல்வேறு மருத்துவ சேவைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

படுக்கைகள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப மருத்துவர், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், ஏழை எளிய மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவையை உறுதி செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: