சென்னை: கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்துக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதேபோல் வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசும், முன்னாள் அமைச்சர் நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன.
அனைத்து வழக்குகளும் ஜூன் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தலைமை நீதிபதி எஸ்.எ.தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் முறையீடு செய்தார். இதைக்கேட்ட அட்வகேட் ஜெனரல் விஜய் நாராண், நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, விசாரணை இம்மாத இறுதியில் விசாரணைக்கு உள்ள நிலையில், அடுத்த விசாரணை வரை எந்த கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்று முன்னாள் அட்கேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்த நிலையில் எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். இறுதி விசாரணை முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
