நியூயார்க்: இந்தியா, அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நீண்டஇழுபறிகளுக்கு பின் கடந்த பிப்ரவரி 7ம் தேதி முடிவானது. இந்த ஒப்பந்தம் இறுதியாவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அமெரிக்க உயர்மட்டக்குழுவினர் கடந்த 1ம் தேதி இந்தியா வந்தனர். பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழுவும், ஒன்றிய வர்த்தகத்துறை கூடுதல் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையிலான இந்திய குழுவும் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று முன்தினம்(ஜூன் 4) நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமெரிக்கா மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி பிகோட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா, அமெரிக்கா இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் முக்கிய பங்காற்றி வருகிறார். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் என்பது டிரம்ப் நிர்வாகத்தின் மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று.
இந்தியா, அமெரிக்கா நாடுகளிடையிலான பரஸ்பர வர்த்தக உறவுகள், கூட்டாண்மையின் முழு பொருளாதார திறன்களை திறக்க உதவும். இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமெரிக்கா மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது” என்றார்.
