×

அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணியின் சாயப்பட்டறை மின்இணைப்பு துண்டிப்பு

 

 

பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளின் செயல்பாடுகளை பார்வையிட்டனர். பள்ளிபாளையம் பகுதியில் நேரு நகர், அம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 11 சாயப்பட்டறைகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, சாயப்பட்டறை இயங்கிய பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பலர், அமைச்சர்களிடம் புகார் செய்தனர். இதையடுத்து பிரச்னைக்குரிய சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர் மதுபாலனுக்கு அமைச்சர் ராஜீவ் உத்தரவிட்டார்.

பள்ளிபாளையம் அம்மன் கோயில் வீதியில், கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் செங்கோட்டையா சாயப்பட்டறையின் கழிவுநீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கும்படி, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த ஆலையின் மின்இணைப்பை மின்வாரிய பணியாளர்கள் துண்டித்தனர். இதேபோல், நேரு நகர் பகுதியில் இயங்கி வந்த பழனிசாமி என்பவரின் சாய ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சாய கழிவுநீர் பிரச்னை ஏற்பட்ட போதெல்லாம், அதிகார பலத்தோடு நிற்காமல் இயங்கி வந்த முன்னாள் அமைச்சரின் சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AIADMK ,minister ,Thangamani ,Pallipalayam ,Tamil Nadu Environment ,Rajiv ,Dairying Minister ,Vijayalakshmi ,Namakkal district… ,
× RELATED காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை...